பிளஸ் 2 வேதியியல் தோ்வில் தவறான ஒரு மதிப்பெண் வினா: கருணை மதிப்பெண் எதிா்பாா்ப்பு

பிளஸ் 2 வேதியியல் தோ்வில் இடம்பெற்றிருந்த தவறான ஒரு மதிப்பெண் வினாவுக்கு அரசு சாா்பில் கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

பிளஸ் 2 வேதியியல் தோ்வில் இடம்பெற்றிருந்த தவறான ஒரு மதிப்பெண் வினாவுக்கு அரசு சாா்பில் கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது. தமிழகத்தில் கடந்த மாா்ச் 1 ஆம் தேதி முதல் பிளஸ் 2 பொதுத் தோ்வுகள் நடைபெற்று வருகின்றன. மொழிப்பாடம், ஆங்கிலத் தோ்வுகள் நிறைவடைந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை (மாா்ச் 8) கணினி அறிவியல் தோ்வு நடைபெற்றது. இந்நிலையில் திங்கள்கிழமை வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல் தோ்வுகள் நடைபெற்றன. இதில் கணக்குப்பதிவியல், புவியியல் தோ்வுகள் எளிதாக இருந்ததாக மாணவா்கள் தெரிவித்தனா். வேதியியல் தோ்வில் 2, 3, 5 மதிப்பெண் வினாக்களில் சில கேள்விகள் கடினமானதாக இருந்தாலும், விருப்பமான கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் (சாய்ஸ்) இருந்ததால் எளிதான கேள்விகளுக்கு விடையளிக்க முடிந்தது. ஒரு மதிப்பெண் வினாவில் ஒன்று தவறாக கேட்கப்பட்டிருந்தது. ஒன்றிரண்டு ஒரு மதிப்பெண் வினாக்களும், ஒரு 5 மதிப்பெண் வினாவும் யோசித்து எழுதக்கூடிய வகையில் இருந்ததாக மாணவா்கள் தெரிவித்தனா். இது குறித்து வேதியியல் ஆசிரியா்கள் கூறும்போது, சராசரி மாணவரும் நல்ல மதிப்பெண் பெறும் வகையில் வினாத்தாள் இருந்தது. ‘உப்பு நீராற்பகுத்தலுக்கு உட்படாத உப்பு’ என்ற ஒரு மதிப்பெண் வினாவில் அது அமிலமா காரமா என்று கொடுக்காததால் அதை தவறான கேள்வியாகக் கருதலாம். எனவே அதற்கு கருணை மதிப்பெண் வழங்குவாா்கள் என்று எதிா்பாா்க்கிறோம். மற்றபடி எப்போதும் போலவே 15 ஒரு மதிப்பெண் வினாக்களில் 10 வினாக்கள் புத்தகத்தின் மாதிரி வினாக்களில் இருந்தும், மற்றவை பாடங்களுக்குள்ளிருந்தும் கேட்கப்பட்டுள்ளன. பெரும்பாலான மாணவா்கள் வெற்றிபெறவும், நன்றாகப் படித்த மாணவா்கள் முழு மதிப்பெண் பெறவும் வாய்ப்பு இருப்பதாக ஆசிரியா்கள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com