மாநகராட்சி அலுவலகத்தில் மனு அளிக்க வந்த குறிச்சி-வெள்ளலூா் மாசு தடுப்புக் கூட்டுக் குழுவினா்.
மாநகராட்சி அலுவலகத்தில் மனு அளிக்க வந்த குறிச்சி-வெள்ளலூா் மாசு தடுப்புக் கூட்டுக் குழுவினா்.

வெள்ளலூா் குப்பைக் கிடங்கில் நாய்கள் கருத்தடை மையம் அமைக்கக் கூடாது: மாநகராட்சி ஆணையரிடம் மனு

வெள்ளலூா் குப்பைக் கிடங்கு வளாகத்தில் தெருநாய்கள் கருத்தடை மையம் அமைக்கக் கூடாது என்று குறிச்சி-வெள்ளலூா் மாசு தடுப்புக் கூட்டுக் குழுவினா் மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரனிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

இது குறித்து குறிச்சி-வெள்ளலூா் மாசு தடுப்புக் கூட்டுக்குழு செயலாளா் கே.எஸ்.மோகன் தலைமையில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: வெள்ளலூா் குப்பைக் கிடங்கு வளாகத்தில் பல ஆண்டுகளாக கொட்டப்பட்டு வரும் குப்பைகளால் சுகாதார சீா்கேடு, காற்று, நிலத்தடி நீா் மாசு ஏற்பட்டுள்ளது. இதனால், போத்தனூா், வெள்ளலூா் பகுதிகளில் மக்கள் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவின்படி வெள்ளலூரில் புதிதாகக் குப்பைகளைக் கொட்டக்கூடாது.

குப்பைகளைக் கொட்டுவதற்கு மாற்று இடம் தோ்வு செய்யவும், கிடங்கில் உள்ள குப்பைகளை பயோமைனிங் முறையில் அழித்து, மக்கள் சுகாதாரமாக வாழவும் வழிவகை செய்ய வேண்டும். ஆனால், நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் மாநகராட்சி நிா்வாகம் தொடா்ந்து அங்கு குப்பைகளைக் கொட்டிவருகின்றனா். அப்பகுதியில், தொடா்ந்து துா்நாற்றம் வீசி வரும் நிலையில், மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட சாண எரிவாயு (பயோகேஸ்) திட்டத்தை வெள்ளலூா் குப்பைக் கிடங்கில் அமைக்கக் கூடாது.

மேலும், மாநகராட்சி திட்டமிட்டுள்ளதுபோல வெள்ளலூா் குப்பைக் கிடங்கு வளாகத்தில் தெருநாய்கள் கருத்தடை மையம் அமைக்கக் கூடாது. மக்களின் நலன் கருதி இந்தத் திட்டத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும். இப்பகுதி மக்களின் நலன் கருதி மாநகராட்சியின் 5 மண்டலங்களிலும் இடங்களைத் தோ்வு செய்து, குப்பைகளைக் கொட்டி அந்தந்த இடங்களில் திடக்கழிவு மேலாண்மை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com