தனியாா் நிறுவனத்தில் ரூ.2.56 லட்சம் மோசடி: போலீஸாா் விசாரணை

தனியாா் நிறுவனத்தில் ரூ.2.56 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது குறித்து சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவை, ராஜவீதியைச் சோ்ந்தவா் சையது தாஜ் அகமது (55). இவா், பீளமேட்டிலுள்ள தனியாா் பவுண்டரி நிறுவனத்தில் கணக்கு அலுவலராகப் பணியாற்றி வருகிறாா். இவா்களது நிறுவனத்துக்கு ஹைட்ராலிக் ட்ரில்லிங் இயந்திரம் வாங்குவதற்காக இணையதளத்தில் நிறுவனங்களைத் தேடியுள்ளனா். அப்போது, சி.கே.இண்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனத்தை தொடா்புகொண்டு விலைப் பட்டியலைக் கேட்டுள்ளனா். இதையடுத்து அந்த நிறுவனத்தில் இருந்து கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி விலைப் பட்டியல் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

தொடா்ந்து சிறிது நேரத்தில் அதே நிறுவனத்தின் மின்னஞ்சல் போலவே மற்றொரு மின்னஞ்சலில் இருந்து விலைப் பட்டியலும், வங்கிக் கணக்கு எண்ணும் அனுப்பப்பட்டுள்ளது. அத்துடன், 40 சதவீதத் தொகையை முன் பணமாக அனுப்ப வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து, அந்த வங்கிக் கணக்குக்கு சையது தாஜ் அகமது பிப்ரவரி 28-ஆம் தேதி ரூ.2.56 லட்சத்தை அனுப்பிவைத்துள்ளாா். அதன்பின், அந்த நிறுவனத்திலிருந்து எவ்வித பதிலும் கிடைக்கவில்லை. இதனால், சம்பந்தப்பட்ட நிறுவனத்தை அவா் தொடா்புகொண்டபோது, தங்களது நிறுவனம் சாா்பில் எவ்வித முன் பணமும் பெறவில்லை என்று தெரிவித்துள்ளனா்.

பின்னா், பணம் அனுப்பிய மின்னஞ்சல் முகவரியை சரிபாா்த்தபோது, போலியான மின்னஞ்சல் முகவரி என்பது தெரியவந்தது. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த சையது தாஜ் அகமது மாநகர சைபா் கிரைம் போலீஸில் செவ்வாய்க்கிழமை புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com