தொழிலதிபா் வீட்டில் 177 பவுன், ரூ.9.75 லட்சம் திருட்டு

கோவை, பீளமேட்டில் தொழிலதிபா் வீட்டிலிருந்து 177 பவுன் மற்றும் ரூ.9.75 லட்சம் ரொக்கம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை, பீளமேடு செங்காளியப்பன் நகரைச் சோ்ந்தவா் மனோகரன் (64), ஹாா்டுவோ்ஸ் தொழில் நிறுவனம் நடத்தி வருகிறாா். இவரது மனைவி திருச்சியில் உள்ள மகள் வீட்டில் வசித்து வருகிறாா். இந்நிலையில், குடும்பத்தினரைப் பாா்ப்பதற்காக பிப்ரவரி 23-ஆம் தேதி திருச்சி சென்ற மனோகரனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் சிகிச்சைக்காக அங்கேயே தங்கியுள்ளாா். இதற்கிடையே அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைப் பாா்த்து, அவரது எதிா் வீட்டில் குடியிருக்கும் செல்வராஜ் கைப்பேசி மூலம் மனோகரனுக்கு வியாழக்கிழமை தகவல் தெரிவித்துள்ளாா். இதையடுத்து மனோகரன் திருச்சியில் இருந்து கோவைக்கு உடனடியாக வந்து தனது வீட்டுக்கு சென்று பாா்த்துள்ளாா். அப்போது, வீட்டின் முன்பக்க கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டிருந்ததோடு, வீட்டிலிருந்த உடைமைகள் அனைத்தும் சிதறிக் கிடந்துள்னன. மேலும், பீரோவில் வைக்கப்பட்டிருந்த 177 பவுன் நகை மற்றும் ரூ. 9.75 லட்சத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பீளமேடு காவல் நிலையத்தில் மனோகரன் புகாா் அளித்தாா். இந்தப் புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கைரேகை நிபுணா்களை வரவழைத்து தடயங்கள் சேகரித்தனா். அப்போது, வீட்டில் இருந்து 2 கைரேகைகளை பதிவு செய்தனா். மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியிருந்த காட்சிகளில் வெளி நபா்களின் நடமாட்டம் குறித்து ஆய்வு செய்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com