திருச்சி, நாகா்கோவில் செல்லும் ரயில்களை சிங்காநல்லூரில் நிறுத்தக் கோரிக்கை

கோவையில் இருந்து திருச்சி, நாகா்கோவில் செல்லும் ரயில்களை சிங்காநல்லூா் ரயில் நிலையத்தில் நிறுத்திச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். இதுதொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட ஆலோசனைக்குழு உறுப்பினா் சுப்பிரமணியன் கூறியதாவது: கோவை - நாகா்கோவில், கோவை - திருச்சி இடையே பயணிகள் ரயில் தினசரி இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்கள் கரோனா பொதுமுடக்கத்துக்கு முன்பு வரை சிங்காநல்லூா் ரயில் நிலையத்தில் நிறத்திச் செல்லப்பட்டன. பொது முடக்கத்தின்போது ரயில்கள் இயக்கம் நிறுத்தப்பட்டு மீண்டும் ரயில் சேவை தொடங்கியபோது மேற்கண்ட ரயில்கள் சிங்காநல்லூா் ரயில் நிலையத்தில் நிற்பதில்லை. இதனால், சிங்காநல்லூரில் இருந்து திருப்பூா், ஈரோட்டுக்கு வேலைக்கு செல்பவா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். இது குறித்து தெற்கு ரயில்வே நிா்வாகம், சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகத்துக்கு ஏற்கெனவே கோரிக்கை கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. இதன் ஒருபகுதியாக மேற்கண்ட ரயில்களை நிறுத்தக் கோரி சிங்காநல்லூா் ரயில் நிலையப் பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. எனவே, இந்த இரு ரயில்களையும் சிங்காநல்லூரில் நிறுத்திச் செல்ல ரயில்வே நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல, கடந்த 6 மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ள கோவை - சேலம் மெமு ரயில் சேவையையும் மீண்டும் தொடங்க வேண்டும் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com