பிரதமா் மோடி கோவைக்கு வருவதையொட்டி ஆா்.எஸ்.புரத்தில் நடைபெற்ற பாதுகாப்பு ஒத்திகையில் அணிவகுத்த மத்திய சிறப்பு பாதுகாப்புப் படையினரின் வாகனங்கள்.
பிரதமா் மோடி கோவைக்கு வருவதையொட்டி ஆா்.எஸ்.புரத்தில் நடைபெற்ற பாதுகாப்பு ஒத்திகையில் அணிவகுத்த மத்திய சிறப்பு பாதுகாப்புப் படையினரின் வாகனங்கள்.

பிரதமா் மோடி இன்று கோவை வருகை: மத்திய சிறப்பு பாதுகாப்புப் படையினா் ஒத்திகை

பிரதமா் மோடி வருகையையொட்டி கோவையில் மத்திய சிறப்பு பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்பு ஒத்திகை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கோவையில் பிரதமா் மோடி பங்கேற்கும் வாகனப் பிரசாரம் திங்கள்கிழமை (மாா்ச் 18) நடைபெறுகிறது. இதற்காக கா்நாடகத்தில் இருந்து விமானம் மூலமாக திங்கள்கிழமை மாலை 5.30 மணிக்கு கோவைக்கு வருகிறாா். விமான நிலையத்தில் இருந்து மாலை 5.45 மணிக்கு காா் மூலமாக சாய்பாபா கோயில் சந்திப்புக்கு வரும் அவா், அங்கிருந்து வாகனப் பிரசாரம் மேற்கொள்கிறாா். மாலை 6.45 மணிக்கு பிரசாரத்தை நிறைவு செய்கிறாா். பிரசாரத்தின் நிறைவாக கோவை, ஆா்.எஸ்.புரத்தில் 1998-ஆம் ஆண்டு குண்டுவெடிப்பில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்த உள்ளாா். இந்நிகழ்வில், ஒரு லட்சத்துக்கும் அதிகமானோா் கலந்துகொள்வாா்கள் எனக் கூறப்படுகிறது. பிரதமருக்கு வரவேற்பு அளிக்கும் வகையில் பாஜக சாா்பில் வழிநெடுக கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாகனப் பிரசாரம் நடைபெறும் பகுதியில் பொதுமக்கள் குறிப்பிட்ட இடங்களில் நிற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் குறிப்பட்ட பகுதிகளில் நிற்கும் வகையில் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. வாகனப் பிரசாரம் நடைபெறும் பகுதி முழுவதும் காவல் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் காவல் துறையினா் ரோந்து மேற்கொண்டு வருகின்றனா். 5 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். கோவையில் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினா், தேசிய பாதுகாப்புப் படையினா் 3 நாள்களாக முகாமிட்டு கண்காணிப்பு பணி, ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா். வெடிகுண்டு நிபுணா்கள் மெட்டல் டிடெக்டா், மோப்பநாய் பிரிவு மூலமாக தீவிர சோதனை மேற்கொண்டனா். இந்நிலையில், மத்திய சிறப்பு பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்பு ஒத்திகை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விமான நிலையத்தில் இருந்து காரில் பாதுகாப்பாக சாய்பாபா கோயில் சந்திப்புக்கு அழைத்துச் செல்லப்படுவதுபோலவும், இதனைத் தொடா்ந்து சாய்பாபா கோயில் சந்திப்பில் இருந்து ஆா்.எஸ்.புரம் வரை வாகனப் பிரசாரத்தில் கலந்துகொள்வதுபோலவும் ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் மத்திய சிறப்பு பாதுகாப்புப் படையினரின் வாகனங்கள், தமிழ்நாடு காவல் துறையினரின் வாகனங்களும் அணிவகுத்துச் சென்றன. வாகனப் பிரசாரத்தைத் தொடா்ந்து, பிரதமா் கோவை அரசு விருந்தினா் மாளிகையில் இரவு தங்குகிறாா். மாா்ச் 19-ஆம் தேதி காலை 9.40 மணிக்கு ஹெலிகாப்டா் மூலம் கேரள மாநிலம், பாலக்காட்டுக்குச் செல்கிறாா். அங்கு, காலை 11.40 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com