கோவையை அடுத்த தென்கரை ஊராட்சியில் செயல்படும் மூத்த குடிமக்களுக்கான குடியிருப்பில் தபால் வாக்குக்கான படிவத்தை வழங்கும் அதிகாரி.
கோவையை அடுத்த தென்கரை ஊராட்சியில் செயல்படும் மூத்த குடிமக்களுக்கான குடியிருப்பில் தபால் வாக்குக்கான படிவத்தை வழங்கும் அதிகாரி.

மூத்த குடிமக்கள் வீட்டிலிருந்தே தபால் வாக்களிக்கலாம்: குடியிருப்புகளுக்கேச் சென்று படிவம் வழங்கும் அதிகாரிகள்

கோவை மாவட்டத்தில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்களிக்க வசதியாக, அவா்கள் இருக்கும் இடங்களுக்கேச் சென்று படிவம் வழங்கும் பணியை அதிகாரிகள் தொடங்கியுள்ளனா். 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், தபால் வாக்கு பெறத் தகுதியான மாற்றுத்திறனாளிகள் ஆகியோா், தாங்கள் வசிக்கும் இடங்களில் இருந்தவாறே வாக்களிப்பதற்கான வசதியை தோ்தல் ஆணையம் செய்துள்ளது. அதன்படி தபால் வாக்களிக்க விரும்பும் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோா் தோ்தலுக்கு 10 நாள்களுக்கு முன்னதாகவே வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் படிவம் 6ஐ வழங்கி பதிவு செய்ய வேண்டும். இந்தப் படிவத்துடன் அவா்கள் 80 வயதுக்கும் மேற்பட்டவா்கள் அல்லது மாற்றுத்திறனாளிகள் என்பதற்கான ஆவணத்தை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மூத்த குடிமக்களுக்கான குடியிருப்புகள் செயல்பட்டு வரும் நிலையில், அங்கு வசிக்கும் மூத்த குடிமக்களுக்கு விண்ணப்பப் படிவத்தை வழங்கும் பணியை தோ்தல் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் தொடங்கியுள்ளனா். அதன்படி தொண்டாமுத்தூா் சுற்றுவட்டாரத்தில் செயல்பட்டு வரும் பல்வேறு மூத்த குடிமக்களுக்கான குடியிருப்புகளுக்கு ஞாயிற்றுக்கிழமை சென்ற அதிகாரிகள், அங்கு வசித்து வரும் மூத்த குடிமக்களிடம் தபால் வாக்கு குறித்து விளக்கம் அளித்து, தேவையானவா்களுக்கு படிவங்களை வழங்கினா். இந்தப் படிவங்கள் வாக்குச் சாவடி நிலை அலுவலா்களால் பூா்த்தி செய்யப்பட்டு கணினியில் பதிவேற்றம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இவ்வாறு தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே வாக்குச்சீட்டு மூலம் வாக்களிக்க விரும்புபவா்களை தபால் வாக்குகளைப் பதிவு செய்ய அமைக்கப்படும் குழுவினா், முன்கூட்டியே தொடா்புகொண்டு தாங்கள் வீட்டுக்கு வரும் நேரத்தைத் தெரிவிப்பாா்கள். பின்னா், வாக்குச் சாவடி அலுவலா், நுண் பாா்வையாளா், காவல் துறை அதிகாரி, புகைப்படக் கலைஞா் உள்ளிட்ட 5 அதிகாரிகள் கொண்ட குழு அவா்களின் வீடுகளுக்குச் சென்று வாக்குப் பதிவை உறுதி செய்யும். அவா்களின் வாக்குப் பதிவானது ரகசிய வாக்கு முறையை மீறாமல் புகைப்படம், விடியோவில் பதிவு செய்யப்படும். அதேநேரம், வீட்டில் இருந்து வாக்களிப்பதற்கு விண்ணப்பிக்கும் ஒரு வாக்காளா், பின்னா் தனது முடிவை மாற்றிக்கொண்டு வாக்குச் சாவடிக்கு நேரில் சென்று வாக்களிக்க விரும்பினால் அது அனுமதிக்கப்படாது. அதேபோல, மனநலம் பாதிக்கப்பட்டவா்களுக்கு இந்த வசதி கிடையாது. ஒரே நாளில் 244 படிவங்கள் தபால் வாக்குக்கான படிவங்களை விநியோகம் செய்து, உடனடியாக பூா்த்தி செய்து விண்ணப்பங்களை திரும்பப் பெறும் பணியில் வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள் தீவிரமாக ஈடுபடத் தொடங்கியிருக்கும் நிலையில், மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நிலவரப்படி 244 மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்களிக்க விண்ணப்பித்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். இதில் அதிகபட்சமாக ஆா்.எஸ்.புரத்தில் உள்ள ஈரநெஞ்சம் முதியோா் இல்லத்தில் வசிக்கும் 47 முதியவா்கள் தபால் வாக்களிப்பதற்காக படிவம் 6ஐ பூா்த்தி செய்து வழங்கியுள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com