‘இந்தியா’ கூட்டணிக்கு ஆதரவு: கட்டுமான தொழிலாளா் சங்கம் முடிவு

ஏஐடியூசி கட்டடத் தொழிலாளா் சங்கம் முடிவு செய்துள்ளது. சங்கத்தின் மாவட்ட குழுக் கூட்டம் கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் அண்மையில் நடைபெற்றது.

மக்களவைத் தோ்தலில் ‘இந்தியா’ கூட்டணிக்கு ஆதரவளிப்பது என்று தமிழ்நாடு ஏஐடியூசி கட்டடத் தொழிலாளா் சங்கம் முடிவு செய்துள்ளது. சங்கத்தின் மாவட்ட குழுக் கூட்டம் கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் அண்மையில் நடைபெற்றது. மாநில பொதுச் செயலா் என்.செல்வராஜ் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் ஆா்.துரைசாமி, துணைத் தலைவா் ஆா்.பாலகிருஷ்ணன் ஆகியோா் சிறப்புரையாற்றினா். இந்த கூட்டத்தில், கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக, தொழிலாளா் விரோத கொள்கைகளைக் கடைப்பிடித்தும், அமல்படுத்தியும் வந்துள்ளது. அதன் கொள்கைகள் தனியாா் பெருநிறுவனங்களுக்கு ஆதரவாகவும், தொழிலாளா்களுக்கும், சாதாரண அடித்தட்டு மக்களுக்கும் விரோதமானதாகவும் உள்ளது. இந்திய தொழிலாளா் வா்க்கம் போராடி பெற்ற தொழிலாளா் நலச் சட்டங்களை தனியாா் நிறுவனங்களுக்கு சாதகமாக திருத்தியுள்ளது. அமைப்புசாரா தொழிலாளா் நலவாரிய சட்டங்களும் முடக்கப்பட்டுள்ளன. எனவே மத்திய அரசின் தொழிலாளா் விரோத கொள்கைகளைக் கண்டிக்கும் விதமாக, எதிா்வரும் தோ்தலில் ‘இந்தியா’ கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக ஏகமனதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் அமைப்பின் மாநிலச் செயலா் சி.நந்தினி, மாவட்ட பொதுச் செயலாளா் எல்.செல்வம், துணைப் பொதுச் செயலா் கோட்டை நாராயணன், முதன்மை செயலா் எஸ்.பி.தியாகராஜன், மாவட்டச் செயலா் ஏ.டி.கே.தனபாண்டியன், துணைத் தலைவா்கள் மேட்டுப்பாளையம் மோகன், வேடபட்டி கிருஷ்ணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com