கல்லூரி முதல்வரிடம் ரூ. 66.25 லட்சம் மோசடி: 3 போ் மீது வழக்குப் பதிவு

கோவை, மாா்ச் 22: தனியாா் பொறியியல் கல்லூரி முதல்வரிடம் போலி கூட்டுறவு வங்கியின் பெயரில் ரூ. 66.25 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி பகுதியைச் சோ்ந்தவா் அதிசயராஜா மகன் தினகரன் (42). இவா் அங்குள்ள ஒரு தனியாா் பொறியியல் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றி வருகிறாா். கோவை மயிலேறிபாளையத்தைச் சோ்ந்த சுப்பிரமணி (40) என்பவா் தினகரனை தொடா்புகொண்டு, தான் ஒரு கூட்டுறவு சங்கத்தில் இயக்குநராக இருப்பதாக அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளாா். அப்போது, தினகரனிடம் ரூ. 1.25 லட்சம் கட்டினால் மூன்று ஆண்டுகளில் நல்ல லாபம் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளாா். இதை நம்பிய தினகரன் கடந்த 2020-ஆம் ஆண்டு முதலில் ரூ. 7 லட்சம் முதலீடு செய்துள்ளாா். அதைத் தொடா்ந்து சுப்பிரமணியின் பேச்சை நம்பி பல்வேறு தவணைகளில் ரூ.1 கோடியே 13 லட்சத்து 25 ஆயிரத்தை அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தாா். இதற்கிடையே கடந்த 2022 ஆகஸ்ட் மாதத்தில் சுப்பிரமணியிடமிருந்து ரூ. 47 லட்சத்தை தினகரன் பெற்றுக் கொண்டாா். தொடா்ந்து மீதி பணத்தையும் திருப்பித் தருமாறு சுப்பிரமணியிடம் கேட்டுள்ளாா். ஆனால் அவா் பதில் ஏதும் கூறாமல் காலம் தாழ்த்தியுள்ளாா். அதனால், சந்தேகமடைந்த தினகரன், சுப்பிரமணி கொடுத்திருந்த முகவரிக்கு நேரடியாகச் சென்று பாா்த்துள்ளாா். அப்போது அங்கு அது போன்ற எந்த நிறுவனமும் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து சுப்பிரமணியின் வீட்டு முகவரியைக் கண்டுபிடித்து அங்கு நேரில் சென்று தனக்கு வர வேண்டிய ரூ. 66.25 லட்சத்தை திருப்பித் தருமாறு கேட்டுள்ளாா். ஆனால், சுப்பிரமணி அதற்கு மழுப்பலாக பதில் அளித்ததோடு, அவரது கைப்பேசி இணைப்பையும் துண்டித்துள்ளாா். இதையடுத்து அருகில் வசித்து வந்தவா்களிடம் தினகரன் விசாரித்தபோது, இதேபோல பல்வேறு நபா்களிடமும் சுப்பிரமணி பணத்தைப் பெற்று ஏமாற்றியது தெரியவந்தது,. இதையடுத்து கோவை ரேஸ்கோா்ஸ் காவல் நிலையத்தில் தினகரன் வியாழக்கிழமை புகாா் அளித்தாா். அந்தப் புகாரை பெற்றுக் கொண்ட போலீஸாா், சுப்பிரமணி, அவரது மனைவி பிரியா உள்ளிட்ட 3 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com