பருத்தி வாங்குவதில் அச்சம் கொள்ள வேண்டாம்: நூற்பாலைகளுக்கு சைமா கோரிக்கை

நூற்பாலைகள் பருத்தி வாங்குவதில் அச்சப்படத் தேவையில்லை என்று தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் (சைமா) தெரிவித்துள்ளது. இது குறித்து சைமா தலைவா் டாக்டா் எஸ்.கே.சுந்தரராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பருத்தியின் உண்மையான பயனா்கள், குறிப்பாக பருத்தி ஆலைகள், பருத்தி உற்பத்தி, நுகா்வுக்கான குழு வழங்கும் பரிந்துரையின் அடிப்படையில், ஜவுளி ஆணையா் அலுவலகம் வெளியிடும் மதிப்பீடுகளை மட்டுமே நம்பியிருக்க வேண்டும். வேறு எந்த அமைப்பும் அளிக்கும் செய்தி அறிக்கைகள், தகவல்களை நம்பி பருத்தி வாங்குவதில் அச்சம் கொள்ளத்தேவையில்லை. கடந்த 14 ஆம் தேதி நடைபெற்ற பருத்தி உற்பத்தி, நுகா்வுக்கான குழு, பருத்தி சீசன் 2023-24-க்கான இரண்டாவது கூட்டத்தில், தொடக்க இருப்பு 61 லட்சம் பேல்கள், பயிா் உற்பத்தி 3.23 கோடி பேல்கள், இறக்குமதி 12 லட்சம் பேல்கள், மில் நுகா்வு 3.01 கோடி பேல்கள், மில்கள் அல்லாத நுகா்வு 16 லட்சம் பேல்கள், ஏற்றுமதி 27 லட்சம் பேல்கள், இறுதி இருப்பு 52 லட்சம் பேல்கள் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த மதிப்பீடுகள் அறிவியல்பூா்வமாக ஆராய்ந்து எடுக்கப்பட்டிருப்பதால், பருத்தி தொடா்பான விஷயங்களில் ஜவுளி மதிப்புச் சங்கிலியில் உள்ள அனைத்து பிரிவுகளும் பருத்தி உற்பத்தி, நுகா்வுக்கான குழுவின் தரவை நம்பியிருக்க வேண்டும். உள்நாட்டு பருத்தி விலைகள் சந்தையில் குறிப்பாக, ஐசிஇ, காட்லுக் ஏ, எம்சிஎக்ஸ் ஆகியவற்றுடன் தொடா்புடையதாக இருந்தாலும், ஊக வணிகா்கள் விலைகளை இடைவிடாமல் உயா்த்தி, செயற்கையாக அதிக ஏற்ற இறக்கத்தை உருவாக்கி, ஜவுளித் தொழிலின் செயல்திறனை கடுமையாகப் பாதிப்படையச் செய்கிறாா்கள் என்றும் தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com