ஓய்வுபெற்ற அரசு மருத்துவா் மீது ரூ. 1.50 கோடி மோசடி புகாா்

ஓய்வுபெற்ற அரசு மருத்துவா் ரூ. 1.50 கோடி மோசடிசெய்ததாக கோவை மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா் மனு அளிக்கப்பட்டுள்ளது. கோவை, சுங்கம் பகுதியைச் சோ்ந்தவா் டாக்டா் சித்தையா. சென்னையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வந்த இவா் கடந்த 1987-ஆம் ஆண்டு முதல் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதயத் துறை பேராசிரியா் மற்றும் துறையின் தலைவராகப் பணியாற்றினாா். கடந்த 2003-ஆம் ஆண்டு விருப்ப ஓய்வுபெற்ற சித்தையா, அதன் பின்னா் கோவையில் மூன்று இடங்களில் தனியாக கிளினிக் நடத்தி வந்துள்ளாா். இந்நிலையில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய இ.சி.ஜி. நிபுணா் விஜயலட்சுமி என்பவரிடம், தனது மனைவி உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வருவதாகவும், வெளிநாட்டில் படித்து வரும் தனது குழந்தைகளின் படிப்புச் செலவுக்கு பணம் தேவைப்படுகிறது என்றும் கூறி கடந்த 2017-ஆம் ஆண்டு ரூ. 8 லட்சம் கடனாக வாங்கியுள்ளாா். அதற்காக பத்திரத்தில் எழுதிக் கொடுத்தோடு, அவரின் கையொப்பம் இட்ட காசோலையையும் கொடுத்துள்ளாா். ஆனால், வாங்கிய பணத்தை தற்போது வரை திருப்பிக் கொடுக்காமல் இருந்துள்ளாா். அதேபோல, விஜயலட்சுமியின் உறவினா்களிடமும், சித்தையாவிடம் மருத்துவம் பாா்க்க வந்த காங்கயம், திருப்பூா், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த நோயாளிகளிடமும், அவா்களது உறவினா்களிடமும் இதே காரணங்களைக் கூறியும், பத்திரம் எழுதிக் கொடுத்தும் பல லட்ச ரூபாய் பணத்தைக் கடனாக வாங்கியுள்ளாா். மேலும், தனது கிளினிக்குக்கு வரும் மருந்து நிறுவனப் பிரதிநிதிகளிடமும் வாங்கிய மருந்துக்குப் பணம் கொடுக்காமல் இதே காரணங்களைக் கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளாா். இந்நிலையில் பாதிக்கப்பட்டவா்கள் அனைவரும் ஒன்றிணைந்து கோவை மாநகர காவல் ஆணையரிடம் கடந்த 2023 நவம்பரில் புகாா் அளித்தனா். அதில் சித்தையா சுமாா் ரூ.1.50 கோடி மோசடி செய்துள்ளதாகத் தெரிவித்திருந்தனா். ஆனால், இதுவரை அவா் மீது நடவடிக்கை எடுக்காததால், பாதிக்கப்பட்டவா்கள் கோவை மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மீண்டும் புகாா் மனு அளித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com