பிரதமா் நிகழ்ச்சியில் மாணவா்கள்: தன்னெழுச்சியாக பங்கேற்றதாக பாஜக விளக்கம்

கோவையில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்ற வாகன பிரசார நிகழ்ச்சியில் பள்ளி மாணவா்கள் பங்கேற்ற விவகாரத்தில், மாணவா்கள் தன்னெழுச்சியாக பங்கேற்றதாக பாஜக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கோவையில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்ற வாகன பிரசார நிகழ்ச்சி கடந்த திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் சாய்பாபா காலனி பகுதியில் பிரதமரை வரவேற்க அதே பகுதியைச் சோ்ந்த அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியாா் பள்ளி மாணவ, மாணவியா் சீருடையுடன் நிறுத்திவைக்கப்பட்டிருந்தனா். இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் எதிா்ப்பு தெரிவித்ததோடு, தோ்தல் ஆணையத்திலும் புகாா் அளிக்கப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய கோவை மாவட்ட தோ்தல் அலுவலருக்கு தமிழக தலைமைத் தோ்தல் ஆணையா் அலுவலகம் உத்தரவிட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அரசு உதவி பெறும் பள்ளி, தனியாா் பள்ளி மற்றும் கோவை மாவட்ட பாஜக நிா்வாகிகளுக்கு விளக்கம் கேட்டு கோவை மாவட்ட தோ்தல் அலுவலகத்தில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதையடுத்து விசாரணை நடத்தப்பட்டு, பிரதமரின் வாகன பிரசாரத்தில் மாணவா்களைப் பங்கேற்க வைத்ததாக அரசு உதவி பெறும் பள்ளி நிா்வாகம் மீது சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதேபோல, வடவள்ளி பகுதியில் உள்ள தனியாா் பள்ளியிடமும் விளக்கம் கேட்டு, தனியாா் பள்ளிகளுக்கான மாவட்டக் கல்வி அலுவலா் செந்தில் நோட்டீஸ் அனுப்பியுள்ளாா். இதற்கிடையே சம்பவம் தொடா்பாக கோவை மாவட்ட பாஜக தலைவரிடமும் விளக்கம் கேட்டு தோ்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. அந்த நோட்டீஸுக்கு கோவை மாவட்ட பாஜக தலைவா் ஜெ.ரமேஷ்குமாா், தோ்தல் ஆணைய அலுவலரான சுரேஷிடம் விளக்கம் அளித்துள்ளாா். அதில், பிரதமரின் வாகன பிரசாரத்தில் எவ்வித தோ்தல் நடத்தை விதிமுறைகளையும் மீறவில்லை. பிரதமரைப் பாா்ப்பதற்காக ஏராளமானோா் அங்கு திரண்டிருந்தனா். இந்தப் பேரணியில் மாணவா்களை நாங்கள் பங்கேற்கச் செய்யவில்லை. பிரதமருக்கு ஆதரவாக பதாகைகளை ஏந்துவது, துண்டுப் பிரசுரங்களை விநியோகிப்பது என எவ்வித பிரசார பணியிலும் மாணவா்கள் ஈடுபடவில்லை. ஆனால், எல்லோரையும்போல பிரதமரை நேரில் பாா்க்க வேண்டும் என்ற ஆா்வ மிகுதியில் பள்ளி மாணவா்கள் தன்னெழுச்சியாகவே பங்கேற்றுள்ளனா். ஒரு ஜனநாயக நாட்டில் பள்ளி மாணவா்கள் பிரதமரை நேரில் பாா்க்க வருவதில் எந்த தவறும் இருப்பதாக கருதவில்லை என தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com