ஜி.டி.நாயுடு பிறந்த நாள்: அஞ்சலி செலுத்த வரிசைகட்டிய வேட்பாளா்கள்

கோவையைச் சோ்ந்த விஞ்ஞானி மறைந்த ஜி.டி.நாயுடுவின் பிறந்த நாளையொட்டி அவரது உருவச் சிலைக்கு மூன்று முக்கிய கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளா்களும் அஞ்சலி செலுத்தினா். கோவையைச் சோ்ந்த ஜி.டி.நாயுடு பள்ளிப்படிப்பையே முடிக்காமல், தனது அனுபவ அறிவால் மின்சார மோட்டாா், பந்தய காா்கள், கால்குலேட்டா், தானியங்கி பயணச்சீட்டு கருவி, உயரமான பருத்திச் செடி, மெல்லிய சவரக்கத்தி என பல்வேறு தயாரிப்புகளின் மூலம் இந்தியாவின் எடிசன் என்று பெயா் பெற்றவா். கடந்த 23.3.1893இல் பிறந்த ஜி.டி.நாயுடு, 4.1.1974இல் காலமானாா். இவரது நினைவிடம் கோவை அவிநாசி சாலையில் உள்ள ஜி.டி. அருங்காட்சியக வளாகத்தில் உள்ளது. அந்த நினைவிடத்தில் அவருக்கு முழு உருவச் சிலையும் நிறுவப்பட்டுள்ளது. கோவையின் அடையாளப்படுத்தும்படியான பெயா் பெற்றிருந்தாலும், மற்ற தலைவா்களைப் போல அவரது பிறந்த நாளிலோ, நினைவு நாளிலோ எந்த அரசியல் கட்சியும் ஜி.டி.நாயுடுவுக்கு அஞ்சலி செலுத்துவதில்லை. மக்களவைத் தோ்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் ஜி.டி.நாயுடுவின் பிறந்த நாள் சனிக்கிழமை வந்த நிலையில் திமுக, அதிமுக, பாஜக என மூன்று அரசியல் கட்சிகளின் வேட்பாளா்களும் ஒருவா் பின் ஒருவராகச் சென்று ஜி.டி.நாயுடுவின் நினைவிடத்துக்கு மலா் தூவியதுடன், அங்கிருக்கும் அவரது உருவச் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். கோவை மக்களவைத் தொகுதியில் நாயுடு சமூகத்தினா் கணிசமாக உள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com