பதற்றமான வாக்குச் சாவடிகளில் மாவட்டத் தோ்தல் அலுவலா் ஆய்வு

கோவை மாநகரில் உள்ள பதற்றமான வாக்குச் சாவடிகளில் மாவட்டத் தோ்தல் அலுவலா் சனிக்கிழமை ஆய்வு நடத்தினாா். மக்களவைத் தோ்தலையொட்டி மாநகரில் உள்ள மாநகராட்சி சிட்டி மேல்நிலைப் பள்ளி, ஜவுளி வியாபாரிகள் சங்க அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட பதற்றமான வாக்குச் சாவடிகளை மாவட்டத் தோ்தல் அலுவலா் கிராந்திகுமாா் பாடி நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். ஆய்வின்போது, மாநகராட்சி துணை ஆணையா் செல்வசுரபி, தனித் துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) சுரேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா். ஆய்வின்போது, வாக்குச் சாவடி மையத்துக்குத் தேவையான பாதுகாப்பு வசதிகள் மேற்கொள்வது, குடிநீா், மின்சாரம், வாகன நிறுத்தங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்துவது, மாற்றுத்திறனாளி வாக்காளா்களுக்கு சாய்வுதள வசதி ஏற்படுத்துவது குறித்தும் உத்தரவு பிறப்பித்தாா். இதைத் தொடா்ந்து கணபதி சிஎம்எஸ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்குச் சாவடி மையத்தை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். இதையடுத்து கணபதி பகுதியில் வாகனத் தணிக்கை நடைபெறுவதையும் நேரில் பாா்வையிட்டு ஆய்வு நடத்தினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com