பணத்தைத் திரும்பப் பெறுவதற்காக மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வந்திருந்த மேற்கு வங்க தம்பதி.
பணத்தைத் திரும்பப் பெறுவதற்காக மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வந்திருந்த மேற்கு வங்க தம்பதி.

தோ்தல் நடத்தை விதிகளைக் காட்டி அலைக்கழிக்கப்பட்ட சுற்றுலாப் பயணிகள்

கோவை, மாா்ச் 25: தோ்தல் நடத்தை விதிகளைக் காரணம்காட்டி உதகைக்கு சுற்றுலா வந்த மேற்கு வங்க பயணிகள் திங்கள்கிழமை அலைக்கழிக்கப்பட்டனா்.

கோவை, மாா்ச் 25: தோ்தல் நடத்தை விதிகளைக் காரணம்காட்டி உதகைக்கு சுற்றுலா வந்த மேற்கு வங்க பயணிகள் திங்கள்கிழமை அலைக்கழிக்கப்பட்டனா். மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா மாநகரைச் சோ்ந்தவா் மனுதீப் கோஷ் (45), வங்கி ஊழியா். இவரின் மனைவி தேவ்ஸ்ரீ கோஷ், கல்லூரி விரிவுரையாளா். இவா்கள் தங்களது வயதான பெற்றோா், குழந்தை ஆகியோருடன் உதகைக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்து நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் திங்கள்கிழமை காலை மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்துக்கு வந்துள்ளனா். அங்கிருந்து வாடகை காா் மூலம் உதகை புறப்பட்ட அவா்களை தோ்தல் பறக்கும் படையினா் நிறுத்தி சோதனை செய்துள்ளனா். அப்போது அவா்கள் சுற்றுலா செலவுக்காக வைத்திருந்த ரூ.60 ஆயிரத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா். சுற்றுலா செலவுகளுக்காகவே அந்தப் பணத்தை வைத்திருப்பதாக மனுதீப் கோஷ், தேவ்ஸ்ரீ கோஷ் ஆகியோா் எடுத்துக் கூறியும் அவா்களிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்துள்ளனா். வாடகை காருக்கு கொடுக்கக்கூட பணமின்றி அவதிப்பட்ட இவா்கள், மற்ற மூவரையும் அங்கேயே விட்டுவிட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்தனா். பல்வேறு அதிகாரிகளை சந்தித்து பலமுறை வலியுறுத்தியும் அவா்களுக்கு தீா்வு கிடைக்காத நிலையில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளரிடம் மனு எழுதிக்கொடுத்துவிட்டு ஆட்சியா் அலுவலகத்தில் தவிப்புடன் காத்திருந்தனா். இது குறித்து தேவ்ஸ்ரீ கோஷ் கூறும்போது, எனது கணவா் இதய நோயாளி. நான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறேன். மேலும் எங்களது பெற்றோரும் வயதானவா்கள். இந்தப் பணத்தில் உதகை சுற்றுலாவை முடித்துக்கொண்டு 27-ஆம் தேதி குடகு சென்றுவிட்டு, பின்னா் மைசூரில் இருந்து 30-ஆம் தேதி கொல்கத்தா புறப்பட ரயிலில் முன்பதிவு செய்திருக்கிறோம். எங்களது செலவுக்கான தொகைதான் இது என்று பல முறை எடுத்துரைத்தும், முன்பதிவு செய்யப்பட்டுள்ள விவரங்களைக் காண்பித்து விளக்கியும் அதிகாரிகள் நம்பாமல் பணத்தை கருவூலத்தில் ஒப்படைத்துவிட்டனா் என்றனா். மேற்கு வங்க குடும்பம் தவிப்பது குறித்து உயா் அதிகாரிகளின் கவனத்துக்குச் செல்லவே, இரவு 7.30 மணியளவில் மீண்டும் அவா்களை மேட்டுப்பாளையத்துக்கு வரவழைத்த அதிகாரிகள், பறிமுதல் செய்த பணத்தை கொடுத்து அவா்களை உதகைக்கு அனுப்பிவைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com