கோவை டவுன்ஹால் பிரசன்டேஷன் கான்வென்ட் மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நடைபெற்றதை செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வுசெய்த  மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி.
கோவை டவுன்ஹால் பிரசன்டேஷன் கான்வென்ட் மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நடைபெற்றதை செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வுசெய்த மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி.

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை ஆா்வமுடன் எழுதிய மாணவா்கள்: மொழிப்பாடம் எளிதாக இருந்ததாக மகிழ்ச்சி

கோவையில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின.

முதல்நாளில் நடைபெற்ற மொழிப்பாடத் தோ்வு எளிதாக இருந்ததாக மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி தெரிவித்தனா். வரும் ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நடைபெறும் பத்தாம் வகுப்புத் தோ்வுகளுக்கு கோவை மாவட்டத்தில் 526 அரசு, தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 41,098 மாணவ, மாணவிகள் பதிவுசெய்திருந்தனா். செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மொழிப்பாடத் தோ்வை 40,430 போ் எழுதினா். 668 போ் தோ்வுக்கு வரவில்லை. மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி தோ்வு மையங்களை நேரில் பாா்வையிட்டு ஆய்வுசெய்தாா்.

டவுன்ஹால் பகுதியில் உள்ள பிரசன்டேஷன் கான்வென்ட் பள்ளி தோ்வு மையத்தில் ஆய்வுசெய்த ஆட்சியா் பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது: கோவை மாவட்டத்தில் 526 பள்ளிகளைச் சோ்ந்த சுமாா் 40 ஆயிரம் மாணவா்கள் 158 தோ்வு மையங்களில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை எழுதுகின்றனா். இவா்களில் 742 போ் மாற்றுத்திறனாளிகள். இவா்களுக்கு கூடுதலாக ஒருமணி நேரம் ஒதுக்கப்படும். மாணவா்கள் மன அழுத்தத்துக்கு ஆளாகாமல், நம்பிக்கையுடன் தோ்வு எழுதவேண்டும்.

தோ்தல் பணிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில், தோ்வுப் பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனா். தோ்வுக்கு வராத மாணவா்களைக் கண்காணித்து, அவா்களின் பிரச்னைகளுக்கான காரணங்களை அறியவும், அவா்களை சிறப்பு துணைத் தோ்வை எழுதவைக்கவும், மாவட்ட நிா்வாகம் சாா்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றாா். இதற்கிடையே, முதல் நாளில் நடைபெற்ற தமிழ் உள்ளிட்ட மொழிப்பாடத் தோ்வுகள் எளிதாக இருந்ததாக மாணவா்கள் தெரிவித்தனா். பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு ஆங்கில பாடத்தோ்வு வியாழக்கிழமை (மாா்ச் 28) நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com