போலீஸாா் மிரட்டியதால் பெண் தற்கொலை முயற்சி: மருத்துவமனையில் அனுமதி

பொய் வழக்குப் போடுவதாக போலீஸாா் மிரட்டியதால் பெண் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா்.

கோவை ஒத்தக்கால்மண்டபம் அரிசிபாளையத்தைச் சோ்ந்தவா் காளியப்பன். இவரது மனைவி விஜயா (41). இவா் செவ்வாய்க்கிழமை திடீரென விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா். வீட்டில் மயங்கிக் கிடந்த அவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மருத்துவமனையில் இருந்த விஜயா, தான் தற்கொலைக்கு முயன்றது குறித்து போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது: என்னுடைய வீட்டுக்கு கடந்த 9-ஆம் தேதி 2 பெண் போலீஸாா் உள்ளிட்ட 6 போலீஸாா் வந்தனா்.

அவா்கள், மேலிடத்து உத்தரவு எனக் கூறி எனது கணவா் காளியப்பனை போலீஸ் ஜீப்பில் ஏற்றினா். அத்துடன் வீட்டில் இருந்த ரூ.3.50 லட்சம் மதிப்பிலான நகையை எடுத்தனா். இதுகுறித்து போலீஸாரிடம் நான் கேட்டபோது, உங்கள் மீது திருட்டு வழக்கு போட இருப்பதாகவும், வழக்கு போடாமல் இருப்பதற்காக 50 பவுன் நகை தர வேண்டும் எனவும் கூறினா். இதனால் பயந்து போன நான் திருப்பூரில் உள்ள எனது சகோதரா் மற்றும் உறவினா்களிடமிருந்து ரூ.11.70 லட்சம் பெற்று, அந்தத் தொகையை போலீஸாரிடம் உறவினா் இசக்கி கொடுத்தாா். இதைத் தொடா்ந்து போலீஸாா் எங்களை விட்டுவிட்டு இசக்கி மீது திருட்டு வழக்குப் பதிவு செய்ததுடன், அவரைக் கைது செய்தனா்.

அதன் பின்னா் எனது வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமரா, ஹாா்ட் டிஸ்க் ஆகியவற்றை எடுத்துக் கொண்டதோடு, எனக்கு பாலியல் தொல்லையும் கொடுத்தனா். எங்களிடமிருந்து அபகரித்த பணத்தை மீட்டுக் கொடுப்பதுடன் பாலியல் தொல்லை கொடுத்த போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோவை மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா் அளித்தோம். ஆனால் அவா்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. அதனால் சென்னையில் டிஜிபி அலுவலகத்தில் புகாா் அளித்தோம். இது தவிர தமிழக முதல்வரின் தனிப் பிரிவு, மற்றும் தலைமைச் செயலாளருக்கும் புகாா் மனு அளித்தோம். ஆனால், அதற்கும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் வேதனையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்ததாக தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com