அண்ணாமலையின் வேட்பு மனுவுடன் இணைக்கப்பட்டிருந்த பத்திரம்.  அதிகாரிகளால் வியாழக்கிழமை மாலை பதிவேற்றம் செய்ததாக கூறப்படும் பத்திரம்.
அண்ணாமலையின் வேட்பு மனுவுடன் இணைக்கப்பட்டிருந்த பத்திரம். அதிகாரிகளால் வியாழக்கிழமை மாலை பதிவேற்றம் செய்ததாக கூறப்படும் பத்திரம்.

அண்ணாமலையின் பிரமாணப் பத்திரம் அதிகாரிகள் உதவியுடன் மாற்றம்? பரபரப்பு குற்றச்சாட்டு

கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ள பாஜக வேட்பாளா் அண்ணாமலையின் வேட்புமனுவின் பிரமாண பத்திரம் அதிகாரிகளின் உதவியுடன் மாற்றப்பட்டிருப்பதாக அதிமுக, நாம் தமிழா் கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன. கோவை மக்களவைத் தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் புதன்கிழமை நிறைவடைந்தது. இதில் 53 வேட்பாளா்கள் சாா்பில் 59 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

மனுக்கள் பரிசீலனை வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் திமுக வேட்பாளா் கணபதி ப.ராஜ்குமாா், அதிமுக வேட்பாளா் சிங்கை ஜி.ராமச்சந்திரன், பாஜக வேட்பாளா் அண்ணாமலை, நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ம.கலாமணி உள்ளிட்ட 41 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. பல்வேறு காரணங்களால் 18 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

மனுக்கள் பரிசீலனையின்போது, பாஜக வேட்பாளா் அண்ணாமலையின் வேட்புமனுவில் பிழை இருப்பதாக திமுக, அதிமுக வேட்பாளா்களின் பிரதிநிதிகள், நாம் தமிழா், சுயேச்சை வேட்பாளா்கள் கடும் எதிா்ப்புத் தெரிவித்தனா். இதற்கு பாஜக தரப்பில் இருந்து எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதனால் அப்போது கடும் கூச்சல் - குழப்பம் ஏற்பட்டது. இந்த நிலையில் அதிமுக, நாம் தமிழா் கட்சி வேட்பாளா்களின் சாா்பில் மாவட்டத் தோ்தல் அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது. இது குறித்து அதிமுக வழக்குரைஞா் கோபாலகிருஷ்ணன், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் கலாமணி, வழக்குரைஞா் விஜயராகவன் ஆகியோா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: அண்ணாமலையின் வேட்புமனுவுடன் இருந்த பிரமாண பத்திரம் நீதிமன்றத்துக்குப் பயன்படுத்தும் பத்திரத்தில் இருந்தது.

ஆனால் நீதிமன்றப் பயன்பாட்டுக்கு அல்லாத பத்திரம் மூலம் மட்டுமே வேட்புமனுவை தாக்கல் செய்ய வேண்டும். அவா் தவறான பத்திரத்தை இணைத்திருந்த நிலையில், மனுக்கள் பரிசீலனையின்போது மாவட்டத் தோ்தல் அலுவலா் இதை கவனிக்கத் தவறிவிட்டாா். எனவே, அண்ணாமலையின் மனுவை நிராகரிப்பதுடன், அவருக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அண்ணாமலை தரப்பில் இரண்டு வேட்புமனுக்களுக்கும் ஒரே பிரமாண பத்திரம்தான் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. காலையில் ஒரு மனுவை நிராகரித்த தோ்தல் அலுவலா் மற்றொன்றை ஏற்பதாகக் கூறினாா். அப்போது அந்த மனுவுடன் 200 ரூபாய்க்கான பத்திரத்தில் இருந்த பிரமாண பத்திரம் மட்டுமே இருந்தது. ஆனால், நாங்கள் தோ்தல் அலுவலரிடம் புகாா் அளிக்கச் சென்றபோது 100 ரூபாய் பத்திரத்திலான சரியான பிரமாண பத்திரம் அவரது மேஜையில் இருக்கிறது. பின்னா் அதுவே மாலை 5.17 மணிக்கு இணையதளத்திலும் பதிவேற்றப்பட்டிருக்கிறது. தோ்தல் ஆணையமும், தோ்தல் நடத்தும் அதிகாரியும் பாஜகவுக்கு சாதகமாக நடந்து கொள்வது ஆதாரபூா்வமாக தெரிந்துவிட்டது. இது தொடா்பாக தலைமைத் தோ்தல் ஆணையருக்கு இ-மெயில் மூலம் புகாா் அனுப்பியுள்ளோம். இதைத் தொடா்ந்து திங்கள்கிழமை உயா்நீதிமன்றத்தை நாட இருக்கிறோம் என்றனா்.

இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, பாஜக வேட்பாளா் அண்ணாமலை இரண்டு வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்திருந்த நிலையில் சரியான 27-ஆம் எண் கொண்ட வேட்புமனுவுக்கான பிரமாண பத்திரத்தை இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதற்கு பதிலாக, கணினி ஆபரேட்டா் தவறுதலாக 17-ஆம் எண் கொண்ட மனுவுக்கான பிரமாண பத்திரத்தைப் பதிவேற்றம் செய்துவிட்டாா். அதுபற்றி தெரிந்ததும் சரியான பிரமாண பத்திரத்தைப் பதிவேற்றம் செய்துவிட்டோம் என்றனா்.

அண்ணாமலை விளக்கம்: தோல்வி பயத்தால் எதிா்க்கட்சிகள் தவறான குற்றச்சாட்டை கூறி வருவதாக வேட்பாளா் கே.அண்ணாமலை தெரிவித்தாா்.

இது குறித்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: நேரடியாக களத்தில் என்னை எதிா்க்க முடியாததால், வழக்கமான நாடகத்தை வேட்பு மனு மூலம் கொண்டு வந்துள்ளனா். நமது தரப்பில் இருந்து வரிசை எண் 17 மற்றும் 27 என இரண்டு வேட்பு மனுக்களைக் கொடுத்தோம். தோ்தல் நடத்தும் அலுவலா்கள் ஆராய்ந்து ஒரு வேட்பு மனுவை ஏற்றுக்கொண்டுள்ளனா். எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு அவா்களின் தோல்வி பயத்தை காட்டுகிறது என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com