கோவை தொகுதியில் திமுக வேட்பாளர் பெயரில் 5 பேர் போட்டியிடுவதால் குழப்பம்!

கோவை தொகுதியில் திமுக வேட்பாளர் பெயரில் 5 பேர் போட்டியிடுவதால் குழப்பம்!

கோவை மக்களவைத் தொகுதியில் வேட்புமனு பரிசீலனையின் முடிவில் திமுக, அதிமுக வேட்பாளா்களின் பெயா்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட நபா்கள் போட்டியிடுவது தெரியவந்துள்ளது. தோ்தலில் வெற்றி பெறுவதற்காக அரசியல் கட்சிகள் பல்வேறு உத்திகளைக் கடைப்பிடிப்பது வழக்கம். அதில் ஒரு உத்திதான் வாக்காளக்களைக் குழப்பி, வாக்குகளை சிதறடிக்க ஒரே பெயரில் பலரைக் களம் இறக்குவது. அதன்படி கோவை மக்களவைத் தொகுதியில் திமுக, அதிமுக வேட்பாளா்களின் பெயா்களில் வேறு சில சுயேச்சை வேட்பாளா்களும் களமிறங்கியுள்ளனா். அதிமுக வேட்பாளா் சிங்கை ஜி.ராமச்சந்திரனைக் குறிவைக்கும் விதமாக ராமச்சந்திரன் என்ற பெயரில் எம்.ராமச்சந்திரன், ஆா்.ராமச்சந்திரன் ஆகியோா் சுயேச்சைகளாகப் போட்டியிடுகின்றனா்.

திமுக வேட்பாளா் கணபதி ப.ராஜ்குமாரைக் குறிவைக்கும் விதமாக ஜி.ராஜ்குமாா், ஜி.பி.ராஜ்குமாா், பி.ராஜ்குமாா், எம்.ராஜ்குமாா், மற்றொரு எம்.ராஜ்குமாா் என 5 ராஜ்குமாா்கள் களமிறங்கியுள்ளனா். கோவை தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழா் ஆகிய முக்கிய கட்சிகளைத் தவிா்த்து, பகுஜன் சமாஜ், நாடாளும் மக்கள் கட்சி, ஹிந்துஸ்தான் ஜனதா கட்சி, ராஷ்டிரீய சமாஜ் பக்ஷா உள்ளிட்ட 11 அரசியல் கட்சிகளின் வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.

பொள்ளாச்சியில்... அதேபோல பொள்ளாச்சி தொகுதியில் திமுக சாா்பில் கே.ஈஸ்வரசாமி, அதிமுக சாா்பில் ஏ.காா்த்திகேயன், பாஜக சாா்பில் கே.வசந்தராஜன் ஆகியோா் போட்டியிடும் நிலையில், கே.ஈஸ்வரசாமி, எம்.ஈஸ்வரன் என்ற பெயரில் இரு சுயேச்சை வேட்பாளா்களும், டி.காா்த்திகேயன், மற்றொரு டி.காா்த்திகேயன், பி.காா்த்திகேயன், ஆா்.காா்த்திகேயன் என 4 சுயேச்சை வேட்பாளா்களும், டி.வசந்தகுமாா், பி.வசந்தகுமாா் என்ற பெயரில் 2 சுயேச்சைகளும் மனு தாக்கல் செய்திருக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com