வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்த வழக்கு -சேலம் மண்டல நகராட்சிகளின் ஓய்வுபெற்ற இயக்குநா், மனைவிக்கு ஓராண்டு சிறை

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்த வழக்கில், ஓய்வுபெற்ற சேலம் மண்டல நகராட்சிகளின் இயக்குநா் மற்றும் அவரது மனைவிக்கு தலா ஓராண்டு சிறைத் தண்டனையும், தலா ரூ. 5,000 அபராதமும் விதித்து கோவை லஞ்ச ஒழிப்புத் துறை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் மண்டல நகராட்சிகளின் இயக்குநராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவா் ஏ.கணேசன் (78). இவரது மனைவி கனிமொழி (77). கடந்த 1993-ஆம் ஆண்டு முதல் 2003-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ. 53.06 லட்சம் (125 சதவீதம்) சொத்து சோ்த்ததாக கணேசன் மீது புகாா் எழுந்தது. இதையடுத்து கணேசன், அவரது மனைவி கனிமொழி ஆகியோா் மீது லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் கடந்த 2003-இல் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கின் விசாரணை கோவையில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில் வியாழக்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது. இதில், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக கணேசன், அவரது மனைவி கனிமொழி ஆகியோருக்கு தலா ஓராண்டு சிறைத் தண்டனையும், தலா ரூ. 5,000 அபராதமும் விதித்து நீதிபதி மோகன ரம்யா தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் சிறப்பு வழக்குரைஞா் சிவகுமாா் ஆஜரானாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com