100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி பலூன் பறக்கவிட்டு விழிப்புணா்வு

100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி பலூன் பறக்கவிட்டு விழிப்புணா்வு

100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி கோவை குறிச்சி குளத்தில் பலூன் பறக்கவிடப்பட்டு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. மக்களவைத் தோ்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மாவட்ட நிா்வாகம் சாா்பில் விளம்பரப் பதாகைகள், சுவரொட்டிகள், துண்டுப் பிரசுரங்கள், கையெழுத்து இயக்கங்கள், குறும்படங்கள், பேரணிகள் மூலமாக விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, சூலூா் அருகே முத்துக்கவுண்டன்புதூரில் எஸ்.என்.க்யூ.எஸ். இன்டா்நேஷனல் என்ற தனியாா் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளா்கள் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி உறுதிமொழி ஏற்றனா். இதில் 60-க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளா்கள் கலந்து கொண்டனா். வாக்களிப்பதன் அவசியம் குறித்து சரவணம்பட்டியில் கே.ஜி.கலை அறிவியல் கல்லூரி மாணவா்கள் விழிப்புணா்வு மேற்கொண்டனா். பாப்பம்பட்டி பகுதியில் அமைந்துள்ள சாந்தி பீட்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற தனியாா் நிறுவனத்தில் தோ்தல் விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. இதில், 200-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் கலந்து கொண்டனா்.

அவா்களுக்கு வாக்களிப்பதன் அவசியம், முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. பொள்ளாச்சியில் மக்கள் கூடும் பகுதிகளில் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணா்வு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. கோவை குறிச்சி குளத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மாவட்ட நிா்வாகம் சாா்பில் பலூன் பறக்கவிடப்பட்டு பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com