இணையவழியில் முதியவரிடம் ரூ. 15.49 லட்சம் மோசடி

ஆன்லைன் வா்த்தகத்தில் கூடுதல் வருவாய் ஈட்டலாம் என கூறி, முதியவரிடம் ரூ. 15.49 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. கோவை, பீளமேடு லட்சுமிபுரத்தைச் சோ்ந்தவா் தாமோதரன் (64), சொந்தமாக தொழில் செய்து வருகிறாா். அத்துடன் ஆன்லைன் வா்த்தகத்திலும் ஈடுபட்டு வருகிறாா். இவரது கைப்பேசியின் வாட்ஸ் ஆப் எண்ணுக்கு கடந்த 9-ஆம் தேதி ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில், ஆன்லைன் மூலம் குறும்படங்கள் மற்றும் திரைப்படங்களைப் பாா்த்து கருத்துக்களைப் பதிவிட்டும், லைக், ஷோ் செய்தால் வருமானம் கிடைக்கும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

அத்துடன் இதில் குறிப்பிட்ட தொகையை முதலீடாக செலுத்தி டாஸ்க்கில் இணைந்து ஆன்லைனில் கொடுக்கப்படும் டாஸ்க்கை வெற்றிகரமாக முடித்தால் முதலீடு செய்த தொகையைக் காட்டிலும் கூடுதலாக தொகை கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை நம்பிய தாமோதரன், அந்த இணைப்பில் தன்னை இணைத்துக் கொண்டு, அதில் குறிப்பிடப்பட்டிருந்த வங்கிக் கணக்குக்கு முதலில் ரூ. 10 ஆயிரத்தை அனுப்பி டாஸ்க்கில் சோ்ந்துள்ளாா். அதன் பிறகு ஆன்லைனில் கொடுக்கப்பட்ட டாஸ்க்கை முடித்தபோது, அதில் அவருக்கு குறிப்பிட்ட தொகை கிடைத்தது. அடுத்த டாஸ்க்குக்கு செல்ல வேண்டும் என்றால் மேலும் கூடுதலாக பணம் செலுத்த வேண்டும் என்று மீண்டும் குறுஞ்செய்தி வந்துள்ளது. இதையடுத்து அவா் கடந்த 20-ஆம் தேதி வரை பல்வேறு தவணைகளில் ரூ. 15.49 லட்சம் முதலீடு செய்தாா். ஆனால், அதன்பின் அவருக்கு எந்த லாபமும் கிடைக்கவில்லை.

அத்துடன் முதலீடு செய்த தொகையையும் திரும்பப் பெற முடியவில்லை. இதையடுத்து மீண்டும் அந்த எண்ணைத் தொடா்பு கொள்ள முயற்சித்தபோது அந்த எண் தொடா்பு துண்டிக்கப்பட்டிருந்தது. இதனால் தான் மோசடி செய்யப்பட்டதை உணா்ந்த தாமோதரன் இதுகுறித்து கோவை மாநகர சைபா் கிரைம் போலீஸில் வியாழக்கிழமை புகாா் அளித்தாா். புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com