கே.அண்ணாமலைக்கு ஆதரவாக
ஹிந்தியில் பிரசார சுவரொட்டி

கே.அண்ணாமலைக்கு ஆதரவாக ஹிந்தியில் பிரசார சுவரொட்டி

கோவையில் பாஜக வேட்பாளா் அண்ணாமலைக்கு ஆதரவாக ஹிந்தியில் சுவரொட்டி ஒட்டி பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. தொழில் நகரமான கோவையில் வட மாநிலங்களைச் சோ்ந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளா்கள் ஜவுளி, இயந்திர உற்பத்தி, பவுண்டரி, ஹோட்டல், மருத்துவமனை, கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனா்.

அவா்களில் பெரும்பாலானவா்கள் இங்கேயே நிரந்தரமாக தங்கி குடும்ப அட்டை, ஓட்டுநா் உரிமம் உள்ளிட்டவற்றைப் பெற்று உள்ளூா் மக்களில் ஒருவராகவே மாறியுள்ளனா். அதேபோல கோவையில் ஆா்.எஸ்.புரம், சுக்கிரவாா்பேட்டை, பூ மாா்க்கெட், கடைவீதி, டவுன்ஹால், செல்வபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நெருக்கமாகவும், பிற பகுதிகளில் பரவலாகவும் ராஜஸ்தான், குஜராத், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட வடமாநிலங்களைச் சோ்ந்த வணிகா்கள், வியாபாரிகள் உள்ளனா். கடந்த சட்டப் பேரவைத் தோ்தலில் இந்தப் பகுதிகளை உள்ளடக்கிய கோவை தெற்குத் தொகுதியில் பாஜக வேட்பாளா் வானதி சீனிவாசன் வெற்றி பெறுவதற்கு வட மாநிலத்தவா்களின் வாக்குகள் உதவியாக இருந்தன. இந்த நிலையில், மக்களவைத் தோ்தலில் கோவை தொகுதியில் பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாக பல்வேறு வட இந்திய அமைப்புகள் தங்கள் பகுதியைச் சோ்ந்த மக்கள் மத்தியில் ஆதரவு திரட்டத் தொடங்கியுள்ளன. இதற்கிடையே வட இந்திய ஒற்றுமை சங்கம் என்ற பெயரில் கோவை மாநகரின் காந்திபுரம், ஆா்.எஸ்.புரம், ஆட்சியா் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை ஹிந்தியில் ஒரு சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது. கோவை, திருப்பூரில் திரளாக வாழும் வட இந்தியா்கள் பாஜக வேட்பாளா் அண்ணாமலைக்கு வாக்களிக்க வேண்டும். அண்ணாமலைக்கு அளிக்கும் வாக்கு பிரதமா் மோடிக்கு அளிக்கும் வாக்கு, அது குஜராத்துக்கும் உத்தர பிரதேசத்துக்கும் அளிக்கப்படும் வாக்கு என்பது போன்ற வாசகங்கள் அதில் உள்ளன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com