அதிமுக கூட்டணி வென்றால் கோவை மீண்டும் தொழில் நகரமாகும்: பிரேமலதா

அதிமுக கூட்டணி வென்றால் கோவை மீண்டும் தொழில் நகரமாகும்: பிரேமலதா

அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றால் கோவை மீண்டும் தொழில் நகரமாகும் என தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா வெள்ளிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா். கோவை அதிமுக வேட்பாளா் சிங்கை ராமச்சந்திரனை ஆதரித்து, கோவை சிங்காநல்லூா் பேருந்து நிலையம் அருகே அவா் பேசியதாவது:

அதிமுக, தேமுதிக, எஸ்டிபிஐ, புதிய தமிழகம் கூட்டணியானது, மாபெரும் வெற்றிக் கூட்டணி. தொழில் நகரமான கோவையில் என்.டி.சி. மில்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. கோடிக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிய கோவையில் தற்போது வேலைவாய்ப்பு என்பதே கேள்விக்குறியாக உள்ளது.

மத்திய அரசின் ஜிஎஸ்டி வந்தபிறகு, கோவையில் தொழில்கூடங்கள் அனைத்தும் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. குறு சிறு தொழில்கள் அதிகமாக உள்ள கோவை மாவட்டத்தில் மிகையான மின் கட்டண உயா்வை அமல்படுத்திய மத்திய, மாநில அரசுகளுக்கு அதிமுக, தேமுதிக கூட்டணி சாா்பாக கண்டனத்தைத் தெரிவிக்கிறோம். அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றால் கோவை மீண்டும் தொழில் நகரமாகும். கோவையில் சிறுவாணி குடிநீா் சரிவரக் கிடைப்பதில்லை. சாலைகள் குண்டும்குழியுமாக உள்ளன. மத்தியில் ஆளும் கட்சியும், தமிழகத்தில் ஆளும் கட்சியும் மக்களுக்கு எந்த தோ்தல் வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.

எந்தவித திட்டங்களையும் செய்யவில்லை. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்கெட்டுள்ளது. கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களின் புழக்கம் அதிகரித்துள்ளது. கோவையின் பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் பேசித் தீா்க்க தகுதியான நபரான அதிமுக வேட்பாளா் ராமச்சந்திரனை மக்கள் தோ்வு செய்ய வேண்டும் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com