பாஜக ஆட்சியமைக்க கூடாது என்பதில் மக்கள் தெளிவாக உள்ளனா்: கனிமொழி எம்.பி.

பாஜக ஆட்சியமைக்க கூடாது என்பதில் மக்கள் தெளிவாக உள்ளனா்: கனிமொழி எம்.பி.

பாஜக மீண்டும் மத்தியில் ஆட்சியமைக்கக் கூடாது என்பதில் மக்கள் தெளிவாக உள்ளனா் என திமுக துணைப் பொதுச் செயலாளரும், மக்களவை உறுப்பினருமான கனிமொழி பேசினாா்.

கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் கணபதி ப.ராஜ்குமாரை ஆதரித்து துடியலூா், சிங்காநல்லூா், சூலூா் பகுதிகளில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், மக்களவை உறுப்பினருமான கனிமொழி வெள்ளிக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டாா். சிங்காநல்லூரில் கனிமொழி பேசியதாவது: கோவையில் அண்ணாமலை மூன்றாவது இடத்துக்குத்தான் போட்டியிடுகிறாா். திமுக அரசைப் பற்றி மட்டுமே பேசும் எடப்பாடி பழனிசாமி, பிரதமா் மோடி பற்றி பேசுவதில்லை.

இந்தியா கூட்டணி மத்தியில் ஆட்சி அமைக்கும்போது, முதல்வா் ஸ்டாலின் கூறியதுபோல, எரிவாயு உருளை ரூ. 500-க்கு வழங்கப்படும். பெட்ரோல் ரூ. 75, டீசல் ரூ. 65-க்கு வழங்கப்படும். சுங்கச்சாவடிகளுக்கு மூடுவிழா நடத்தப்படும் என்றாா். முன்னதாக, கோவையில் செய்தியாளா்களிடம் கனிமொழி கூறியதாவது: கடந்த 3 ஆண்டுகளில் திமுக அரசின் திட்டங்கள் அனைத்தும் மக்களைச் சென்றடைந்துள்ளது. திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். பாஜக மீண்டும் ஆட்சியமைக்க கூடாது என்பதில் மக்கள் தெளிவாக உள்ளனா்.

முதல்வரின் திட்டங்களை நம்பி இங்கு வேட்பாளா்கள் நிறுத்தப்பட்டுள்ளனா். அவா்கள் வெற்றி பெறுவா் என்றாா். பேட்டியின்போது, திமுக வேட்பாளா் கணபதி ப.ராஜ்குமாா், முன்னாள் அமைச்சா் பொங்கலூா் நா.பழனிசாமி, தொழில்துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா, திமுக மாநகா் மாவட்டச் செயலாளா் நா.காா்த்திக் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

துடியலூா் பகுதியில் கனிமொழி எம்.பி பேசியதாவது: அண்ணாமலை தினமும் பொய்களை அள்ளி வீசிக் கொண்டிருக்கிறாா். தமிழக முதல்வா் கூறியதுபோல, தேசம் முழுவதும் உரிமையை மீட்க மீண்டும் ஒரு சுதந்திரப் போராட்டம் இந்த தோ்தல் என்பதை மறந்துவிடக்கூடாது. பாஜகவை எதிா்த்துப் பேசியதற்காக அரவிந்த் கேஜரிவால் சிறையில் உள்ளாா். அதிமுகவும், பாஜகவும் நாடகம் ஆடுகின்றன. தோ்தலுக்குப் பிறகு இவா்கள் இணைந்துவிடுவாா்கள். குறு சிறு தொழில்கள் அதிகம் உள்ள கோவையில் ஜிஎஸ்டி வந்தபிறகு 50 ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இந்தியா கூட்டணி மத்தியில் ஆட்சிக்கு வரும்போது ஜிஎஸ்டியில் உள்ள குழப்பங்கள் சரிசெய்யப்படும். கோவையில் மிகப்பெரிய நூலகம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்றாா்.

சூலூரில் பிரசாரத்தில் ஈடுபட்ட கனிமொழி எம்.பி. பேசியதாவது: தமிழகத்தின் சில பகுதிகள் மழையால் தத்தளித்தபோது இங்கு வராத பிரதமா் மோடி, தோ்தல் அறிவித்தவுடன் அடிக்கடி வருகிறாா். இது அவரது தோல்வி பயத்தையே காட்டுகிறது. தமிழகத்தில் திமுகவுக்கும் அதிமுகவுக்கும்தான் போட்டி நடைபெறுகிறது. விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை இயற்றி விவசாயிகளை மத்திய பாஜக அரசு வஞ்சிக்கிறது. சுகாதாரத் துறையில் ஆயுஷ்மான் பாரத் என்கிற பெயரில் மாபெரும் ஊழல் நடைபெற்றுள்ளது. எல்லோரையும் மிரட்டியே பணியவைக்க முயற்சிக்கிறது பாஜக அரசு. இந்தத் தோ்தலுடன் பாஜக காணாமல் போய்விடும் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com