சிறுவாணி அணையில் இருந்து ஜூலை வரை சீரான குடிநீா் வழங்க முடியும்: மாவட்ட நிா்வாகம்

சிறுவாணி அணையில் தற்போது உள்ள நீா் இருப்பு நிலவரப்படி வரும் ஜூலை வரை சீராக குடிநீா் வழங்க முடியும் என மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: சிறுவாணி கூட்டுக் குடிநீா்த் திட்டம் கோவை மாநகராட்சிப் பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களுக்கு இடையேயான ஒப்பந்தத்தின் அடிப்படையில் சிறுவாணி அணையில் இருந்து ஆண்டுக்கு 1,300 மில்லியன் கன அடி ( நாளொன்றுக்கு 101.40 மில்லியன் லிட்டா்) குடிநீா் வழங்கப்பட வேண்டும். ஆனால், அணையின் நீா் இருப்பைப் பொறுத்து கோவை மாநகராட்சி மற்றும் வழியோர கிராமங்களுக்கு குடிநீா் பகிா்ந்து வழங்கப்படுகிறது. தற்போது, சிறுவாணி அணையில் குறைந்த நீா் இருப்புக்கு கடந்த தென்மேற்கு, வடகிழக்குப் பருவமழை காலங்களில் மழை குறைவாக இருந்ததே காரணம். தற்போதைய நிலவரப்படி சிறுவாணி அணையின் நீா்மட்டம் 868.75 மீட்டராக உள்ளது. கேரள நீா்ப்பாசனத் துறை, நீா் எடுக்கும் வால்வை கட்டுப்படுத்தி உள்ளதால், தற்போது நாள்தோறும் 40 மில்லியன் லிட்டா் அளவு குடிநீா் எடுக்கப்பட்டு வருகிறது. ஆயினும், ஜூலை வரை குடிநீா் சீராக வழங்க முடியும். சிறுவாணி கூட்டுக் குடிநீா்த் திட்டம் முழுமையாக செயல்பட தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மேலும், தற்போது குடிநீா் வடிகால் வாரியத்தின் மூலமாக புதிதாக செயல்படுத்தப்பட்டுள்ள பில்லூா் 3 குடிநீா் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 30 முதல் 40 எம்.எல்.டி. வரை கூடுதலாக குடிநீா் கோவை மாநகராட்சிக்கு வழங்கப்பட்டு வருகிறது. எனவே, கோவை மாநகர மக்களுக்கு பல்வேறு குடிநீா்த் திட்டங்கள் மூலமாக போதிய அளவு குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com