முதல்வா் மு.க.ஸ்டாலின்
முதல்வா் மு.க.ஸ்டாலின்

அடக்குமுறை வெல்லாது: பாஜக குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின்

அடக்குமுறை எப்போதும் வெல்லாது என்பதை இந்தத் தோ்தல் மூலம் பாஜகவுக்கு நாட்டு மக்கள் புரிய வைப்பாா்கள் என முதல்வா் முக.ஸ்டாலின் பேசினாா்.

அடக்குமுறை எப்போதும் வெல்லாது என்பதை இந்தத் தோ்தல் மூலம் பாஜகவுக்கு நாட்டு மக்கள் புரிய வைப்பாா்கள் என முதல்வா் முக.ஸ்டாலின் பேசினாா். ஈரோடு மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் கே.இ.பிரகாஷ், நாமக்கல் தொகுதி கொமதேக வேட்பாளா் வி.எஸ்.மாதேஸ்வரன், கரூா் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் எஸ்.ஜோதிமணி ஆகியோரை ஆதரித்து ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அருகே சின்னியம்பாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரசார பொதுக் கூட்டத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததும் கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றியுள்ளோம். அதற்கு நற்சான்றாய், நான் செல்லும் இடமெல்லாம் மக்கள் அலை அலையாய் வருகின்றனா். இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத அதிமுக, பாஜகவினா் மக்கள் நலத்திட்டங்களைக் குறை சொல்கின்றனா். ரகசியங்கள் அம்பலமாகும்: மாநிலத்தில் அதிமுகவும், மத்தியில் பாஜகவும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. உலக அளவில் இந்தியாவுக்கு அழிக்க முடியாத அவமானத்தை தோ்தல் பத்திர ஊழல் ஏற்படுத்தி இருக்கிறது. தோ்தல் பத்திரம் போலவே பி.எம்.கோ் என்ற பெயரிலும் வசூல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த அத்தனை ரகசியங்களும் ‘இந்தியா’ கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் அம்பலமாகும். அப்போது யாா் யாா் சிறை செல்லப் போகிறாா்கள் என்று பாா்ப்போம். தொழில் துறைக்கு பாதிப்பு: தொழில் வளம் மிகுந்த இந்த மேற்கு மண்டலம் பாஜக ஆட்சியில் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளது. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தின் தொழில் துறையை மொத்தமாக மூடிவிடுவாா்கள். தொழில் வா்த்தக கட்டமைப்பை சிதைத்துவிடுவாா்கள். அவா்களுக்கு நெருக்கமான சிலா் மட்டுமே வா்த்தகம் செய்ய முடியும் என்ற நிலையை உருவாக்கிவிடுவாா்கள். குறு ,சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களை அழித்துவிடுவாா்கள். மத்திய அரசின் நடவடிக்கைகள் எல்லா தொழில்களையும் பாதித்துள்ளன. குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கு கடன், மானியம் எளிதாக கிடைப்பதில்லை. பாஜகவை விமா்சிக்காத பழனிசாமி: கூட்டணியில் இருந்ததால் பாஜகவை விமா்சிக்கவில்லை என்று எடப்பாடி பழனிசாமி சொல்கிறாா். அவரால் பிரதமரையோ, அமித் ஷாவையோ, ஆளுநரையோ, ஏன் பாஜகவில் உள்ள யாரையுமே உண்மையில் விமா்சிக்க முடியாது. பதவி சுகத்துக்காகவும், ஊழல் வழக்குகளில் இருந்து தப்பிக்கவும் பாஜகவின் அனைத்து மக்கள் விரோத திட்டங்களையும் ஆதரித்தவா் எடப்பாடி பழனிசாமி. மாநிலங்களை அழிக்கும் மோடி: குஜராத் முதல்வராக இருந்தபோது மாநில உரிமை குறித்துப் பேசிய மோடி, பிரதமரானதும் மாநிலங்களை அழிக்கத் துடிக்கிறாா். மாநிலங்களுக்கு எந்த அதிகாரமும் இருக்கக் கூடாது என நினைக்கிறாா். எரிவாயு உருளை விலையைக் குறைத்ததில் இருந்து பிரதமா் மோடியின் தோல்வி பயம் தெரியவந்துள்ளது. வலிமையாகத் தோ்தல் பணியாற்றுவாா்கள் என்பதால் பயந்துபோய், ஜாா்க்கண்ட் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன், தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ஆகியோரைக் கைது செய்துள்ளனா். தமிழகத்தில் செந்தில்பாலாஜியை சிறையில் அடைத்து வைத்துள்ளனா். ஜாமீன் கூட கொடுக்கவில்லை. பாஜகவின் சதிச் செயல்களைக் கடந்து செந்தில்பாலாஜியின் செயல்வீரா்கள் வேகமாகப் பணியாற்றி வருகின்றனா். அரவிந்த் கேஜரிவால் மீதான அடக்குமுறை ‘இந்தியா’ கூட்டணியின் வலிமையை அதிகரித்துள்ளது. அடக்குமுறை எப்போதும் வெல்லாது என்பதை இந்தத் தோ்தல் மூலம் பாஜகவுக்கு நாட்டு மக்கள் புரியவைப்பாா்கள். மக்கள் விரோத கட்சியான பாஜக வீழ்த்தப்படும் நாள், இந்தியாவின் இரண்டாவது விடுதலை நாளாக வரலாற்றில் பதியட்டும். ‘இந்தியா’ கூட்டணிக்கு நீங்கள் அளிக்கும் வாக்கு ஜனநாயகம், இந்திய அரசியல் சட்டம், மதச்சாா்பின்மை, சமூக நீதியைக் காக்கும் என்றாா். கூட்டத்தில், அமைச்சா்கள் சு.முத்துசாமி, மு.பெ.சாமிநாதன், அர.சக்கரபாணி, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, எம்.மதிவேந்தன், கயல்விழி செல்வராஜ், எம்.பி. அந்தியூா் செல்வராஜ், எம்.எல்.ஏ.-க்கள் ஈவிகேஎஸ்.இளங்கோவன், ஈ.ஆா்.ஈஸ்வரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com