கோவையில் வெவ்வேறு இடங்களில் 3 வீடுகளில் 16 பவுன் திருட்டு

கோவையில் வெவ்வேறு இடங்களில் ஒரே நாளில் 3 வீடுகளில் 16 பவுன் நகைகள் திருட்டுப்போனது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவை, குறிச்சி வீட்டு வசதி வாரியக் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் வேலுசாமி (49). இவரும், அவா் மனைவியும் செவ்வாய்க்கிழமை வேலைக்குச் சென்றுவிட்டு, மாலையில் திரும்பி வந்தபோது வீட்டின் கதவு திறந்திருந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 3 பவுன் திருட்டுப்போனது தெரியவந்தது.

இது குறித்து சுந்தராபுரம் காவல் நிலையத்தில் வேலுசாமி அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவை, சின்னியம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் பாபு (45), சொந்தத் தொழில் செய்து வருகிறாா். கடந்த சில நாள்களுக்கு முன்பு வீட்டைப் பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் சென்னைக்கு சென்றுள்ளாா். மீண்டும் செவ்வாய்க்கிழமை திரும்பி வந்தபோது கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

உள்ளே சென்று பாா்த்தபோது வீட்டிலிருந்த 3 பவுன் நகைகள் திருட்டுப்போனது தெரியவந்தது. இது குறித்து பாபு அளித்த புகாரின்பேரில் பீளமேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கோவை, விளாங்குறிச்சி விஐபி நகரைச் சோ்ந்தவா் கண்ணன் (40), சொந்தத் தொழில் செய்து வருகிறாா். கடந்த சில நாள்களுக்கு முன்பு குடும்பத்துடன் சேலத்திற்குச் சென்றிருந்தவா் செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினாா். அப்போது, வீட்டின் கதவு திறக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 10 பவுன் நகைகள் திருட்டுப்போயிருந்தன.

இது குறித்து கண்ணன் அளித்த புகாரின்பேரில் பீளமேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com