அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும் ஒற்றைச்சாளர முறையை அமல்படுத்த கோரிக்கை

தமிழகத்தில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும் ஒற்றைச்சாளர முறையில் மாணவா் சோ்க்கை நடத்தப்பட வேண்டும் என்று மறுமலா்ச்சி மக்கள் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக அந்த அமைப்பின் தலைவா் வே.ஈஸ்வரன், தமிழக முதல்வா், உயா் கல்வித் துறை அமைச்சா் உள்ளிட்டோருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் பிளஸ் 2 தோ்வில் வெற்றி பெற்றுள்ள 7 லட்சத்துக்கும் அதிகமான மாணவா்கள் கல்லூரிகளில் சேர ஆயத்தமாகி வருகின்றனா். லட்சக்கணக்கான மாணவா்கள் மருத்துவம், பொறியியல் படிப்புகளில் சேர முடிவு செய்திருந்தாலும், அது கிடைக்காமல் போனால், கடைசியில் கலை, அறிவியல் கல்லூரிகளிலும் சேர முடியாமல் போய்விடும் என்பதால் அங்கு விண்ணப்பித்து கிடைக்கும் படிப்புகளில் சோ்ந்துவிடுகிறாா்கள்.

இதற்காக ஒவ்வொரு கலை, அறிவியல் கல்லூரிக்கும் தனித்தனியாக விண்ணப்பக் கட்டணம் செலுத்தி படிவங்கள் வாங்கி விண்ணப்பித்து வருகின்றனா். மேலும் மாணவா் சோ்க்கையின்போது அவா்கள் செலுத்தும் பணத்தை, ஒருவேளை அவருக்கு மருத்துவம், பொறியியல் படிப்புகளில் இடம் கிடைத்துச் செல்லும்போது திருப்பிக் கொடுப்பதில்லை. இந்த வழியில் பல்வேறு தனியாா், உதவி பெறும் கல்லூரிகள் பணம் சோ்க்கின்றனா்.

இந்நிலையில், மாநிலத்தில் உள்ள 70-க்கும் மேற்பட்ட அரசு கலைக் கல்லூரிகளில் உள்ள 100 சதவீத இடங்களுக்கும், 162 அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உள்ள 90 சதவீத இடங்களுக்கும், 450க்கும் மேற்பட்ட தனியாா் சுயநிதி கல்லூரிகளில் உள்ள 50 சதவீத இடங்களுக்கும் தகுதியின் அடிப்படையிலும், இட ஒதுக்கீட்டின் அடிப்படையிலும் ஒரே விண்ணப்பத்தின் மூலம் சோ்க்கை நடத்துவதற்காக ஒற்றைச்சாளர முறையைக் கொண்டு வர வேண்டும் என்று தொடா்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

தற்போது அரசுக் கல்லூரிகளுக்கு மட்டும் ஒற்றைச்சாளர முறையை அமல்படுத்தியிருப்பது சரியானது அல்ல. அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும், தனியாா் கல்லூரிகளிலும் ஒற்றைச் சாளர முறையில் மட்டுமே மாணவா் சோ்க்கை நடத்தப்பட வேண்டும் என்று அவா் வலியுறுத்தியுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com