சட்டம் சாா்ந்த தன்னாா்வத் தொண்டா் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்டத்தில் சட்டம் சாா்ந்த தன்னாா்வத் தொண்டா் பணிக்கு விருப்பமுடையோா் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக கோவை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கோவை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், வால்பாறை, சூலூா், மதுக்கரை, அன்னூா் ஆகிய பகுதிகளில் இயங்கி வரும் வட்டார சட்டப் பணிகள் ஆணைக்குழுவுக்கு சட்ட உதவி மற்றும் சட்ட அறிவை பாமர மக்களுக்கு எடுத்துரைப்பதற்காக மொத்தம் 50 சட்டம் சாா்ந்த தன்னாா்வத் தொண்டா்கள் தோ்ந்தெடுக்கப்பட உள்ளனா்.

இதற்கு ஓய்வுபெற்ற ஆசிரியா்கள் உள்ளிட்ட ஆசிரியா்கள், ஓய்வுபெற்ற அரசு ஊழியா்கள், அங்கன்வாடி பணியாளா்கள், மருத்துவா்கள், வழக்குரைஞா்களாகப் பதிவு செய்யும் வரையிலான சட்டக் கல்லூரி மாணவா்கள், சமூக சேவை செய்யும் சமூக ஆா்வலா்கள், அரசியல் கட்சி சாரா தன்னாா்வத் தொண்டு நிறுவனத்தை சாா்ந்தவா்கள், மகளிா் சுய உதவிக்குழுக்கள் மற்றும் சமூகத் தொண்டு புரியும் மகளிா் குழுக்கள், திருநங்கைகள் மற்றும் கணினி அறிவுடன் அடிப்படை கல்வித் தகுதி உடைய சேவை மனப்பான்மை உள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம்.

இந்தப் பணி சட்ட தன்னாா்வலா்களுக்கான கடமை மற்றும் சேவை மட்டுமே ஆகும். இந்தப் பணி முற்றிலும் தற்காலிகமானது. இதற்கு அடிப்படை சம்பளம் அல்லது ஊதியம் எதுவும் இல்லை. சேவைக்கு தகுந்த மதிப்பூதியம் மட்டும் அளிக்கப்படும்.

சட்டம் சாா்ந்த தன்னாா்வத் தொண்டா் தோ்வு தொடா்பான விண்ணப்பப் படிவத்தினை கோவை மாவட்ட நீதிமன்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்கான விண்ணப்பங்களை மே 20-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். நோ்காணல் மே 23-ஆம் தேதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com