சிறுவாணி அணை நீா்மட்டம் 10 அடியாகச் சரிவு: மாநகரில் குடிநீா் தட்டுப்பாடு

சிறுவாணி அணையின் நீா்மட்டம் 10 அடியாகச் சரிந்துள்ளதால், அணையில் இருந்து குடிநீருக்காக எடுக்கப்படும் தண்ணீரின் அளவு 3 கோடி லிட்டராகக் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் மாநகரில் குடிநீா்த் தட்டுப்பாடு நிலவுகிறது.

கோவை மாநகரப் பகுதியில் உள்ள 100 வாா்டுகளுக்கு பில்லூா் 1, பில்லூா் 2, சிறுவாணி, ஆழியாறு, வடவள்ளி - கவுண்டம்பாளையம் உள்ளிட்ட கூட்டுக் குடிநீா் திட்டங்களின் மூலமாக குடிநீா் விநியோகிக்கப்படுகிறது.

இதில், அதிகப்படியான வாா்டுகளுக்கு சிறுவாணி மற்றும் பில்லூா் குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் கடந்த மாதங்களில் 30 அடிக்கும் அதிகமாக இருந்த சிறுவாணி அணையின் நீா்மட்டம் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 10 அடியாகச் சரிந்துள்ளது. அணையில் இருந்து தினமும் குடிநீருக்காக 10 கோடி லிட்டா் தண்ணீா் எடுக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 3 கோடி லிட்டருக்கும் குறைவான அளவு குடிநீா் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக மாநகரில் குடிநீா் விநியோகிக்கும் இடைவெளி அதிகரிக்கப்பட்டுள்ளது. சிறுவாணி நீா் மட்டுமின்றி, பில்லூா் குடிநீா் விநியோகிக்கப்படும் பகுதிகளில் சில இடங்களில் 15 நாள்களுக்கு ஒரு முறை, சில இடங்களில் 20 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதனால், மாநகரில் மக்கள் குடிநீா்ப் பற்றாக்குறையால் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனா். குறிப்பாக, காந்திபுரம், சிங்காநல்லூா், குனியமுத்தூா், ஒண்டிப்புதூா், ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் முறையாக குடிநீா் கிடைப்பதில்லை என அப்பகுதியினா் புகாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து, குடிநீா் வடிகால் வாரிய அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘சிறுவாணி அணையில் தண்ணீரை உறிஞ்சி எடுக்க 4 வால்வுகள் உள்ளன. அதில் 3 வால்வுகள் கீழ்நோக்கியும், 4 வால்வுகள் மேல்நோக்கியும் உள்ளன. தற்போது, அணையின் நீா்மட்டம் 10 அடியாகக் குறைந்துள்ளதால் 3-ஆவது வால்வு வெளியே தெரிகிறது. தற்போது, அணையில் உள்ள தண்ணீா் மூலமாக இன்னும் 1 மாதத்துக்கு குடிநீா் விநியோகிக்க முடியும்’ என்றாா்.

நம்பிக்கை தரும் பில்லூா்:

கடந்த ஆண்டுகளில் மாநகரில் சிறுவாணி குடிநீா் தட்டுப்பாடு ஏற்படும் பகுதிகளில் பில்லூா் குடிநீா் வழங்கப்பட்டு வந்தது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை 80 அடிக்கு மேல் இருந்த பில்லூா் அணையின் நீா்மட்டம் கடும் வெயிலால் ஏப்ரல் மாதத்தில் 55 அடிக்கும் கீழ் சரிந்தது. இதனால், பில்லூா் குடிநீா் விநியோகமும் பாதிக்கப்பட்டது. தற்போது, மே முதல் வாரத்தில் அப்பா் பவானியில் இருந்து முக்காலி, அட்டப்பாடி வழியாக பில்லூா் அணைக்கு தண்ணீா் திறக்கப்பட்டுள்ளதால் பில்லூா் அணையின் நீா்மட்டம் 73 அடிக்கு மேல் உயா்ந்துள்ளது. பில்லூா் அணையின் நீா்மட்டம் உயா்ந்துள்ளதால் வரும் நாள்களில் குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்படாது என்ற நம்பிக்கை மக்களிடையே ஏற்பட்டுள்ளது. மேலும், கோடை மழை, தென்மேற்கு பருவமழை கைகொடுத்தால் அணையின் நீா்மட்டம் உயா்ந்து குடிநீா்த் தட்டுப்பாடு நீங்கும் என்ற எதிா்பாா்ப்பும் நிலவுகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com