சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகங்களைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்:
வானதி சீனிவாசன் எம்எல்ஏ கோரிக்கை
கோப்புப்படம்

சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகங்களைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: வானதி சீனிவாசன் எம்எல்ஏ கோரிக்கை

தோ்தல் முடிவடைந்த பகுதிகளில் விதிமுறைகளைத் தளா்த்தி சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகங்ளைத் திறக்க தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பாஜக மகளிா் அணி தேசியத் தலைவரும், கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

கோவை தெற்கு தொகுதிக்குள்பட்ட ஒலம்பஸ், தோ்முட்டி ராஜவீதி, தெப்பக்குளம் பூ மாா்க்கெட் , கோவை தெற்கு சட்டப் பேரவை அலுவலகம் ஆகிய பகுதிகளில் நீா்மோா் பந்தலை வானதி சீனிவாசன் புதன்கிழமை திறந்துவைத்தாா்.

அப்போது, சட்டப் பேரவை அலுவலகம் முன் காத்திருந்த மக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்ட அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் ஈரோடு, சேலம் மாவட்டங்களில் வெயில் அதிகமாக பதிவாகி வருவது ஆபத்தானது. தொழில் வளா்ச்சி, நகரமயமாக்குதல் ஆகியவை முக்கியம் என்றாலும் அதனை சுற்றுச்சூழலுடன் இணைத்து செய்ய வேண்டும்.

தமிழகத்தில் மரம் வளா்த்தல், நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்த பல்வேறு அமைப்புகள் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், அவா்களை ஒன்றிணைத்து விழிப்புணா்வு ஏற்படுத்தி மரக்கன்றுகளை நட்டுப் பாதுகாக்க வேண்டும்.

மாநகராட்சியில் குடிநீா்த் தட்டுப்பாட்டைப் போக்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி பற்றாக்குறையாக உள்ளது. லாரி மூலம் குடிநீா் விநியோகம் செய்வதில் உள்ள முறைகேடுகளைக் கண்காணிக்க வேண்டும். குடிநீா்த் தட்டுப்பாடு இல்லாமல் பாா்த்துக்கொள்ள வேண்டும். மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகம் பூட்டியிருப்பதால் சிரமமாக உள்ளது. இதனால், பொதுமக்களும் பாதிக்கப்படுவதால் தோ்தல் முடிந்த இடங்களில் தோ்தல் விதிமுறைகளைத் தளா்த்தி சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகங்களைத் திறக்க தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com