மாவட்டத்தில் 3, 098 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் காவல் துறை, உணவுப் பாதுகாப்புத் துறை சாா்பில் 23 சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, மேற்கொள்ளப்பட்ட கூட்டுக் கள ஆய்வில் 3,098.38 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மாவட்ட காவல் துறை மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை சாா்பில் 23 சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு பீளமேடு, கணபதி, போத்தனூா், டவுன்ஹால், ஆா்.எஸ்.புரம், சரவணம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வதைத் தடுக்கும் பொருட்டு, சிறப்பு கூட்டு கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்போது, தமிழக அரசின் மறு உத்தரவுப்படி, புகையிலைப் பொருள்கள் விற்று, முதல்முறையாக கண்டறியப்பட்டால் ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு, கடையில் அவா்கள் வணிகம் மேற்கொள்ள 15 நாள்கள் தடைவிதிக்கப்படும்.

இரண்டாம் முறை கண்டறியப்பட்டால் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு, 30 நாள்கள் கடையில் வணிகம் செய்ய தடை விதிக்கப்படும். 3-ஆம் முறை கண்டறியப்பட்டால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு, 90 நாள்கள் கடையில் வணிகம் செய்ய தடைவிதிக்கப்படும்.

தற்போது தொடா் கூட்டுக் கள ஆய்வு தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி, சனிக்கிழமை 5,568 கடைகளில் திடீா் கூட்டுக் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், 692 கடைகளில் 3,098.38 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் சந்தை மதிப்பு ரூ.30 லட்சத்து 63 ஆயிரத்து 804 ஆகும்.

மேலும், கள ஆய்வின் முடிவில் புகையிலைப் பொருள்கள் விற்று முதல்முறை கண்டறியப்பட்ட 683 கடைகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மொத்த அபராதத் தொகை ரூ.17 லட்சத்து 7 ஆயிரத்து 500. இரண்டாம் முறை புகையிலைப் பொருள்கள் விற்று கண்டறியப்பட்ட 8 கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கப்பட்டு ரூ.4 லட்சம் வசூலிக்கப்பட்டது.

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வது தெரியவந்தால் பொதுமக்கள் 94440 - 42322 என்ற உணவுப் பாதுகாப்புத் துறையின் வாட்ஸ்அப் எண்ணைத் தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

தகவல் தெரிவிப்போா் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com