அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் இயங்காத தனியாா் பேருந்துகள் மீது அபராத நடவடிக்கை

கோவையில் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் இயங்காத தனியாா் பேருந்துகள் மீது போக்குவரத்துத் துறை சாா்பில் அபராத நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கோவையில் சுமாா் 200-க்கும் மேற்பட்ட தனியாா் நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதில், பெரும்பாலான பேருந்துகள் நகா்ப்புறத்தை ஒட்டிய கிராமப் பகுதியில் செல்லும் வகையில் வழித்தட அனுமதி பெற்றுள்ளன. தவிர அரசுப் போக்குவரத்து கழகம் மூலமாகவும் அனைத்து கிராமங்களுக்கும் நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கரோனா காலகட்டத்தில் ஏராளமான அரசுப் பேருந்துகள் கிராமப்புற பகுதிகளுக்கு இயக்கப்படவில்லை. ஓட்டுநா், நடத்துநா் தட்டுப்பாட்டால் கரோனா காலத்தில் தனியாா் நகரப் பேருந்துகளும் இயக்கப்படவில்லை.

கரோனா தாக்கம் முற்றிலும் நீங்கிய நிலையில் தற்போது, அரசுப் பேருந்துகள் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் முறையாக இயக்கப்பட்டு வருகின்றன.

ஆனால், நகரப் பகுதியில் இருந்து கிராமப்புறம் வரை வழித்தட அனுமதிபெற்ற தனியாா் பேருந்துகள் அனுமதிக்கப்பட்ட வழித்தடம் வரை இயக்காமல் கடந்த சில ஆண்டுகளாக பாதி வழியிலேயே பயணிகளை இறக்கிவிட்டு திரும்புவதாக புகாா் எழுந்தது.

இது தொடா்பாக, சென்னையில் உள்ள போக்குவரத்து ஆணையா் மற்றும் கோவை போக்குவரத்து இணை ஆணையருக்கு கோவை கன்ஸ்யூமா் வாய்ஸ் அமைப்பின் செயலா் நா.லோகு புகாா் மனு அனுப்பி இருந்தாா்.

அதன்பேரில், அனுமதிக்கப்பட்ட வழித்தடம் வரை இயக்காத பேருந்துகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு அறிக்கை அளிக்குமாறு வட்டாரப் போக்குவரத்து அலுவலா்களுக்கு இணைப் போக்குவரத்து ஆணையா் அண்மையில் உத்தரவிட்டிருந்தாா்.

இதைத் தொடா்ந்து, கோவையில் மோட்டாா் போக்குவரத்து அலுவலா்கள் மேற்கொண்ட ஆய்வில் 20-க்கும் மேற்பட்ட தனியாா் பேருந்துகள் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் முழுமையாக இயங்காமல், பாதி வழியிலேயே பயணிகளை இறக்கிவிடுவது தெரியவந்தது. அந்தப் பேருந்து உரிமையாளா்கள் மீது சனிக்கிழமை அபராத நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com