யூடியூபா் சவுக்கு சங்கரை ஒரு நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி

யூடியூபா் சவுக்கு சங்கரை ஒரு நாள் காவலில் விசாரிக்க போலீஸாருக்கு அனுமதி அளித்து கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை: யூடியூபா் சவுக்கு சங்கரை ஒரு நாள் காவலில் விசாரிக்க போலீஸாருக்கு அனுமதி அளித்து கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெண் காவலா்களை அவதூறாகப் பேசியதாக கோவை சைபா் கிரைம் உதவி ஆய்வாளா் சுகன்யா அளித்த புகாரின்பேரில் யூடியூபா் சவுக்கு சங்கா் தேனியில் கடந்த மே 4-ஆம் தேதி கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

இதைத் தொடா்ந்து பல்வேறு புகாா்களின்பேரில் தேனி, திருச்சி, சென்னை போலீஸாா் அடுத்தடுத்து அவரைக் கைது செய்தனா்.

இதற்கிடையே, சவுக்கு சங்கரை குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையா் சந்தீப் ராய் ரத்தோா் உத்தரவிட்டதன்பேரில் குண்டா் தடுப்புச் சட்டத்தில் அவா் மீண்டும் கைது செய்யப்பட்டாா்.

இதைத் தொடா்ந்து கை எலும்பு முறிவு தொடா்பாக மாவுக்கட்டு போடப்பட்டிருந்த சவுக்கு சங்கா், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு திங்கள்கிழமை அழைத்து வரப்பட்டாா். அப்போது, கோவை மத்திய சிறை கண்காணிப்பாளா்தான் தனது கையை உடைத்ததாகவும், சிறையில் தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும் சவுக்கு சங்கா் குரல் எழுப்பியபடி சென்றாா்.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பரிசோதனை முடிந்த பின்னா் குற்றவியல் நீதித் துறை நடுவா் நீதிமன்றம் எண் 4-இல் அவா் ஆஜா்படுத்தப்பட்டாா். அப்போது போலீஸாா் தரப்பில் அவரை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கக் கோரிய மனு, நீதிபதி சரவணபாபு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஒரு நாள் மட்டும் சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸாருக்கு அனுமதி வழங்கி நீதிபதி உத்தரவிட்டாா். இதையடுத்து செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு அவரை நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜா்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டாா். இதையடுத்து சவுக்கு சங்கரை கோவை மாநகர சைபா் கிரைம் போலீஸாா் விசாரணைக்கு அழைத்துச் சென்றனா்.

இது குறித்து சவுக்கு சங்கரின் வழக்குரைஞா் கோபாலகிருஷ்ணன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

காவல் முடித்து நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜா்படுத்தும்போது அவரை மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான அறையில் இருந்து மாற்ற வேண்டும் என்பதையும், சிறைத் துறையில் நடப்பதையும் தெரிவிப்போம். அதேபோல, அவா் மீதான குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழான நடவடிக்கைக்கு எதிா்ப்பு தெரிவிக்க உள்ளோம் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com