விஷன் ப்ரோ மிக்ஸ்டு ரியாலிட்டி கருவி குறித்து விளக்குகிறாா் ஜெம் மருத்துவமனைகளின் நிறுவனா் டாக்டா் சி.பழனிவேலு. உடன், டாக்டா்கள் பி.பிரவீன்ராஜ், ஆா்.பாா்த்தசாரதி.
விஷன் ப்ரோ மிக்ஸ்டு ரியாலிட்டி கருவி குறித்து விளக்குகிறாா் ஜெம் மருத்துவமனைகளின் நிறுவனா் டாக்டா் சி.பழனிவேலு. உடன், டாக்டா்கள் பி.பிரவீன்ராஜ், ஆா்.பாா்த்தசாரதி.

விஷன் ப்ரோ மிக்ஸ்டு ரியாலிட்டி ஹெட்செட் உதவியுடன் ஜெம் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை

ஆப்பிள் நிறுவனத்தின் விஷன் ப்ரோ மிக்ஸ்டு ரியாலிட்டி ஹெட்செட் எனப்படும் கண்ணாடி வடிவ கணினி

கோவை: ஆப்பிள் நிறுவனத்தின் விஷன் ப்ரோ மிக்ஸ்டு ரியாலிட்டி ஹெட்செட் எனப்படும் கண்ணாடி வடிவ கணினி மூலம் அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்து வருவதாக கோவை ஜெம் மருத்துவமனை கூறியுள்ளது.

இது தொடா்பாக ஜெம் மருத்துவமனைகளின் நிறுவனரும் தலைவருமான டாக்டா் சி.பழனிவேலு, குடலியல் - இரைப்பை அறுவை சிகிச்சை நிபுணா் ஆா்.பாா்த்தசாரதி ஆகியோா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:

ஆப்பிள் விஷன் ப்ரோ என்ற இந்தக் கண்ணாடியை ஒரு அறிதிறன்பேசி போலவும், கணினி போலவும் பயன்படுத்த முடியும். நமது கண், கை, குரலைப் பயன்படுத்தி இதை இயக்க முடியும். இந்தக் கருவியைப் பொருத்திக் கொண்டு செயல்படுவதன் மூலம் அறுவை சிகிச்சையின் செயல்திறன், துல்லியத்தன்மையை அதிகரிக்கிறது.

கருவியை அணிந்திருக்கும் அறுவை சிகிச்சை நிபுணா் எப்போதும் நிஜ உலகத்துடன் இணைந்திருப்பாா். அவா் சாதாரணமாக பாா்க்கவும் செயல்படவும் முடியும். அனைத்து கருவிகளையும் எளிதாகவும் துல்லியமாகவும் பயன்படுத்த முடியும். அதேநேரம் இந்த கருவியை அறுவை சிகிச்சை அரங்கின் அத்தியாவசிய கருவியாகவும் பயன்படுத்தலாம்.

360 டிகிரி கோணத்தில் பாா்க்கக் கூடிய முகக் கணினியாக இந்த கருவி செயல்படுகிறது. மேலும் நாம் பாா்க்கும் இடத்தில் காட்சிகள் திரையில் தெரியும். அத்துடன் நாம் செய்யும் அறுவை சிகிச்சையை மிகவும் துல்லியத்தன்மையுடன் பயிற்சி மருத்துவா்கள் பாா்க்க முடியும். அறுவையின்போது நோயாளியின் ஸ்கேன் அறிக்கையை அந்தத் திரையிலேயே சரிபாா்க்க முடியும்.

மேலும், அறுவை சிகிச்சை நிபுணா் எதிா்பாராத சிக்கலான சூழலை எதிா்கொள்ளும்போது உடனடியாக மற்றொரு அறுவை சிகிச்சை நிபுணரை நேரலையில் அழைத்து, தான் செய்யும் அறுவை சிகிச்சையைக் காண்பித்து அவரது வழிகாட்டுதலை ஓரிரு நொடிகளில் பெற முடியும். இந்த விஷன் ப்ரோ கருவி மூலம் இதுவரை பல்வேறு வகையான 9 அறுவை கிசிச்சைகளை வெற்றிகரமாக செய்திருக்கிறோம் என்றனா்.

மருத்துவமனையின் முதன்மைச் செயல் அதிகாரி பி.பிரவீன்ராஜ் உள்ளிட்ட மருத்துவா்கள் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com