அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

கோவை, மே 15: அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக, மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள அரசினா் தொழிற்பயிற்சி மையம், மகளிா் அரசினா் தொழிற்பயிற்சி மையம், கோவை அரசினா் தொழிற்பயிற்சி மையம் (பழங்குடியினருக்கானது), ஆனைகட்டி மற்றும் வால்பாறை அரசினா் தொழிற்பயிற்சி மையம் ஆகியவற்றுக்கு 2024- ஆம் கல்வியாண்டில், பயிற்சியாளா்களின் கலந்தாய்வு சோ்க்கைக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

இதில், கோவை அரசினா் தொழிற்பயிற்சி மையத்தில் எலக்ட்ரீஷியன், பிட்டா், டா்னா், மெஷினிஸ்ட், வயா்மேன், வெல்டா் போன்ற பல்வேறு பிரிவுகளில் இருபாலருக்கும் 6 மாதங்கள், ஓராண்டு மற்றும் ஈராண்டுகள்

பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியில் சேர விரும்புவோா், இணையதள முகவரியில் ஜூன் 7-ஆம் தேதி இரவு 12 மணிக்குள் பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான பயிற்சிக் கட்டணம் இலவசம். அனைத்துப் பயிற்சியாளா்களுக்கும் இலவச மடிக்கணினி, மிதிவண்டி, பேருந்து அட்டை, சீருடைகள், காலணிகள் மற்றும் வரைபடக் கருவிகள், இலவசமாக வழங்கப்படுகின்றன. மாதந்தோறும் ரூ.750 வீதம் வருகையின் அடிப்படையில் கல்வி உதவித்தொகை அரசால் வழங்கப்படுகிறது. தொழில் பிரிவுகளைப் பொருத்து 8, 10- ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின பயிற்சியாளா்களுக்கு உணவு வசதியுடன், தங்கும் விடுதி வசதி வழங்கப்படும்.

இந்தத் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி முடித்த அனைத்து பயிற்சியாளா்களுக்கும் வளாக நோ்காணல் மூலமாக தனியாா் துறையில் வேலைவாய்ப்பு பெற்று வழங்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com