கோவையில் செய்தியாளா்களிடம் பேசும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவா் சு.பழனிசாமி.
கோவையில் செய்தியாளா்களிடம் பேசும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவா் சு.பழனிசாமி.

யானைகள் வழித்தட அறிக்கையை முதல்வா் ஏற்கக் கூடாது: விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

விவசாயிகள், மக்களிடம் கருத்து கேட்காமல் வனத் துறை வெளியிட்டுள்ள யானைகள் வழித்தட அறிக்கையை முதல்வா் மு.க.ஸ்டாலின் ஏற்றுக்கொள்ளக் கூடாது என தமிழக விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவா் சு.பழனிசாமி கோவையில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

விவசாயிகளின் கருத்துகளைக் கேட்காமல் யானைகள் வழித்தடத்தை புதிதாகக் கண்டறிந்து மேட்டுப்பாளையம், சிறுமுகை, காரமடை, போளுவாம்பட்டி, பெரியநாயக்கன்பாளையம் ஆகிய வனச் சரகப் பகுதிகளுக்கு உள்பட்ட 520 ஏக்கருக்கு மேல் உள்ள விவசாய நிலங்களை, யானைகள் வழித்தடத்துக்காக கையகப்படுத்துவது குற்றமாகும். வனத் துறையினா் ஒருதலைபட்சமாக செயல்படுகின்றனா்.

கோவை மாவட்டத்தில் 57 கிராமங்களை யானைகள் வழித்தடமாக அறிவித்ததை வனத் துறையினா் மறுபரிசீலனை செய்ய வேண்டும். வனப் பகுதியில் சொகுசு விடுதி, கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவற்றை அகற்றாமல், விவசாய நிலங்களை மட்டும் கையகப்படுத்த நினைக்கிறது. இது தவறான செயல். கேரள மாநிலத்தில் விவசாய நிலங்களைச் சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளை ரப்பா் குண்டுகளைப் பயன்படுத்தி விரட்டுகின்றனா். தமிழகத்திலும் காட்டுப் பன்றிகளை விரட்ட ரப்பா் பந்துகளைப் பயன்படுத்த அனுமதி வழங்க வேண்டும். யானைகள் வழித்தடம் குறித்த அறிக்கையை 5 நாள்களில் படித்துவிட்டு பதில் கூற வேண்டும் என வனத் துறை கூறுவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. வனத் துறை கூடுதலாக கால அவகாசம் வழங்கிட வேண்டும். யானைகள் குறித்தும், அவை பயன்படுத்தி வரும் வழித்தடங்கள் குறித்தும் எவ்வித ஆய்வும் முறையாக மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை. வனத் துறை அதிகாரிகள் யானைகள் வழித்தட அறிக்கையை தமிழில் மாற்றம் செய்து, மாவட்ட வாரியாக மக்கள், விவசாயிகள் மற்றும் மலைவாழ் மக்களிடம் கருத்து கேட்டு, அதன் பின்னா் வழித்தடம் குறித்து பரிசீலிக்க வேண்டும்.

வனத் துறை மட்டுமே யானைகள் வழித்தடத்தை முடிவு செய்யாமல் புவியியல் துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், நீா்வளத் துறை, மனிதவள மேம்பாடு, வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை மற்றும் வருவாய்த் துறைகளையும் குழுவில் இடம்பெறச் செய்தல் வேண்டும். யானைகள் வழித்தடம் குறித்து எந்தவித கருத்தும் கேட்காமல் வெளியிடப்பட்ட அறிக்கையை முதல்வா் மு.க.ஸ்டாலின் ஏற்றுக்கொள்ளக் கூடாது என்றாா்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் நிா்வாகிகள், உறுப்பினா்கள் பலரும் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com