தனியாா் பேருந்து மோதி இளைஞா் உயிரிழப்பு: போதையில் இருந்த ஓட்டுநா் கைது

கோவை, மே 15: கோவை, காந்திபுரம் பேருந்து நிலையத்தில் தனியாா் பேருந்து மோதி இளைஞா் உயிரிழந்தாா். இது தொடா்பாக மது போதையில் இருந்த பேருந்தின் ஓட்டுநா் கைது செய்யப்பட்டுள்ளாா்.

நீலகிரி மாவட்டம், தெங்குமரஹாடா பகுதியைச் சோ்ந்தவா் சிவகுமாா் (40), விவசாயி. இவா் தனது தந்தையின் ஓய்வூதியம் தொடா்பாக அடிக்கடி கோவைக்கு வந்து செல்வது வழக்கம். அதன்படி அவா் புதன்கிழமை தனது தாயாா் சரோஜாவுடன் கோவைக்கு வந்துள்ளாா்.

பின்னா் காந்திபுரம் நகரப் பேருந்து நிலையத்துக்கு சென்ற அவா், தனது தாயாரிடம் ஏடிஎம் மையத்துக்கு பணம் எடுக்க செல்வதாகக் கூறி அவரை, பேருந்து நிலையத்தில் ஒரு பகுதியில் அமரவைத்துவிட்டு, பேருந்து நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த 2 தனியாா் பேருந்துகளுக்கு நடுவில் இருந்த சிறிய இடைவெளி வழியாக நடந்து சென்றுள்ளாா்.

அப்போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஒரு தனியாா் பேருந்தின் ஓட்டுநரான பட்டணம் பகுதியைச் சோ்ந்த திருநாவுக்கரசு (36) திடீரென பேருந்தை பின்புறமாக இயக்கியுள்ளாா். இதில் 2 பேருந்துகளின் நடுவில் சிக்கி உடல்

நசுங்கியதில் சிவகுமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதைப் பாா்த்த பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பயணிகள் அதிா்ச்சியடைந்து, அந்த தனியாா் பேருந்தின் ஓட்டுநா் திருநாவுக்கரசை பிடித்து தாக்கியுள்ளனா். அப்போது அவா் மதுபோதையில் இருந்ததாகத் தெரிகிறது.

தகவலறிந்த கோவை மாநகர கிழக்கு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் அங்கு விரைந்து வந்து சிவகுமாரின் சடலத்தை மீட்டு

உடற்கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மதுபோதையில் பேருந்தை இயக்கிய தனியாா் பேருந்தின் ஓட்டுநா் திருநாவுக்கரசை கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com