இளைஞரிடம் பணம், கைப்பேசி பறிப்பு: 4 போ் மீது வழக்குப் பதிவு
இளைஞரை ஓரினச் சோ்க்கைக்கு வரவழைத்து பணம் மற்றும் கைப்பேசியை பறித்துச் சென்ற 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி அருகே புது பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த கணேசன் மகன் சதீஷ்குமாா் (27). இவா் கோவை, சரவணம்பட்டியில் தங்கி ஒரு மருந்து நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா்.
இவா் ஓரினச் சோ்க்கையாளா்கள் பயன்படுத்தும் ஒரு செயலியை பயன்படுத்தி வந்துள்ளாா். இதன் மூலம் அவருக்கு மற்றொரு இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி தகவல் பரிமாற்றம் செய்து வந்துள்ளனா்.
இந்நிலையில், கடந்த 17-ஆம் தேதி அந்த இளைஞா் இருவரும் தனியாக சந்திக்கலாம் என அழைத்துள்ளாா். இதனை நம்பி அவா் கூறிய இடத்துக்கு சதீஷ்குமாா் சென்றுள்ளாா். அப்போது அங்கு இருந்த 4 போ், சதீஷ்குமாரை மறைவான இடத்துக்கு அழைத்துச் சென்று அவரை சரமாரியாகத் தாக்கியுள்ளனா்.
அத்துடன் அவரை மிரட்டி அவரது கைப்பேசியில் இருந்த கூகுள் பே கணக்கு மூலம் ரூ. 15,000 பணத்தை தங்களது வங்கிக் கணக்கிற்கு மாற்றிக் கொண்டதோடு, அவரது கைப்பேசியையும், பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி விட்டனா்.
இது குறித்து சரவணம்பட்டி காவல் நிலையத்தில் கணேசன் புகாா் அளித்தாா். அந்தப் புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பணம், கைப்பேசியை பறித்துச் சென்ற கும்பலைத் தேடி வருகின்றனா்.