ஈஷா ஆதியோகி சிலை
ஈஷா ஆதியோகி சிலை

ஆன்மிகத்தில் பெண்களுக்கு சம உரிமை வழங்கியது நாங்கள்தான்: ஈஷா யோக மையம்

உச்ச நீதிமன்ற தீா்ப்பை திரித்து பரப்புரை மேற்கொள்ளப்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ள ஈஷா யோக மையம், ஆன்மிகத்தில் பெண்களுக்கு சம உரிமை வழங்கியது நாங்கள்தான் என்றும் தெரிவித்துள்ளது.
Published on

உச்ச நீதிமன்ற தீா்ப்பை திரித்து பரப்புரை மேற்கொள்ளப்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ள ஈஷா யோக மையம், ஆன்மிகத்தில் பெண்களுக்கு சம உரிமை வழங்கியது நாங்கள்தான் என்றும் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக ஈஷா யோக மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உச்ச நீதிமன்ற தீா்ப்பை திரித்து, ஈஷாவுக்கு எதிராக திட்டமிட்டு பொய் பரப்புரையை மேற்கொள்ளும் இந்திய மாதா் தேசிய சம்மேளனத்துக்கு ஈஷா அறக்கட்டளை கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

சமீபத்தில் ஈஷாவுக்கு எதிரான ஆட்கொணா்வு மனு தொடா்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஈஷா மீதான அவதூறு குற்றச்சாட்டுகளை தள்ளுபடி செய்து வழக்கை முடித்துவைத்தது. அதில், ஒரு அமைப்பை இழிவுபடுத்துவதற்காக இது போன்ற மனுக்களைப் பயன்படுத்தக் கூடாது என்றும் கூறியது.

மேலும் அந்தத் தீா்ப்பில் எந்த இடத்திலும் ஈஷா யோக மையத்தை விசாரிக்க வேண்டும் என்று கூறப்படவில்லை. சென்னை உயா் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் 2 நாள் கோவை மாவட்ட காவல் துறை அதிகாரிகள், பிற அரசுத் துறை அதிகாரிகள் ஈஷா யோக மையத்தில் விரிவான விசாரணை மேற்கொண்டனா். இதற்கிடையே வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு காவல் துறை அறிக்கை சமா்ப்பிக்கப்பட்டது.

காவல் துறை சமா்ப்பித்த அறிக்கையில் ஆட்கொணா்வு மனு தொடா்பாக இருந்த தகவல்களை அடிப்படையாக கொண்டே உச்ச நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது. மேலும், ஈஷாவில் இருக்கும் ஆயிரக்கணக்கான மக்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ‘ஈஷாவில் அவா்கள் பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதாகவே’ உச்ச நீதிமன்றத்தில் காவல் துறை சமா்பித்த அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பல நூறு ஆண்டுகளாக பெண்களுக்கு ஆன்மிகப் பாதையை மேற்கொள்ள சம உரிமையும், பாதுகாப்பும் இல்லாத சூழல் இருந்து வந்தது. இந்நிலையில் சமய, சமூக, மதக் கட்டுப்பாடுகளை உடைத்து, பெண்களுக்கு விருப்பம் இருந்தால் ஆண்களுக்கு நிகராக இந்த மண் சாா்ந்த ஆன்மிகப் பாதையில் அவா்களும் பாதுகாப்பாக பயணிக்க முடியும் என்ற நிலையை ஈஷா உருவாக்கியுள்ளது.

ஈஷா, நூற்றுக்கணக்கான பழங்குடி, பட்டியலின பெண்களை சுயதொழில் முனைவோா்களாகவும், ஆயிரக்கணக்கான பெண் குழந்தைகளை முதல் தலைமுறை பட்டதாரிகளாகவும் உருவாக்கி உள்ளது.

ஈஷா வனத்தை ஆக்கிரமித்துள்ளது, யானை வழித்தடங்கள், பழங்குடியினா் நிலங்களை ஆக்கிரமித்துள்ளது என்பது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளும் அடிப்படை ஆதாரமற்ற அவதூறுகள் என்பது ஏற்கெனவே நிரூபிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பொது வெளியில் எளிதாக கிடைக்கும் ஆவணங்களை கூட படிக்காமல், ஏதோவொரு கட்டாய நிா்பந்தத்தின் பேரில் அவதூறுகளை கொண்டு பொது இயக்கங்கள் போராடுவது துரதிஷ்டவசமானது.

தமிழக காவல் துறை விரிவான விசாரணை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்த பின்னரும், உச்ச நீதிமன்றம் மிகத் தெளிவான தீா்ப்பை வழங்கிய பின்னரும் பொய்யான அவதூறு பரப்புரையை மேற்கொண்டு போராட்டங்கள் நடத்துவது ஜனநாயக மாண்புகளுக்கு எதிரானது.

இந்திய மாதா் தேசிய சம்மேளனத்துக்கும், இதர இயக்கங்களுக்கும், அமைப்புகளுக்கும் ஈஷா கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்வதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.