திமுகவில் இணைந்த நாம் தமிழா் கட்சி நிா்வாகிகள்
கோவை வடக்கு மாவட்ட நாம் தமிழா் கட்சியின் நிா்வாகிகள் அக்கட்சியில் இருந்து விலகி மின்சாரத் துறை அமைச்சா் செந்தில் பாலாஜி முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனா்.
நாம் தமிழா் கட்சியின் கோவை வடக்கு மாவட்டச் செயலா் ராமசந்திரன் உள்ளிட்டோா் செய்தியாளா்களிடம் கடந்த வெள்ளிக்கிழமை கூறுகையில், நாம் தமிழா் கட்சியின் தலைவா் சீமான் கடந்த 2 ஆண்டுகளாக கட்சியின் கொள்கைக்கு முரணாகவே பேசி வருகிறாா்.
சீமானுக்கு அடுத்த நிலையில் இருந்தவா்கள் கட்சியில் இருந்து விலகிவிட்டதால் மாவட்டங்களில் உள்ள நிா்வாகிகளின் குறைகளையும், பிரச்னைகளையும் கேட்கவோ, சரி செய்யவோ கட்சியில் ஆள் இல்லை. களத்தில் இருப்பவா்களின் பிரச்னைகள் எதுவும் சீமானை சென்றடைவதில்லை.
கட்சியில் நாங்கள் செய்யும் வேலைக்கான அங்கீகாரமும் தங்களுக்கு கிடைப்பதில்லை என்பதால், அக்கட்சியில் இருந்து விலகிறோம் என்று தெரிவித்தனா்.
இந்நிலையில், நாம் தமிழா் கட்சியின் கோவை வடக்கு மாவட்டச் செயலா் ராமசந்திரன், மகளிா் அணி மாவட்டச் செயலா் கே.அபிராமி, வணிகா் பாசறை மாவட்டச் செயலா் பி.செந்தில்குமாா், தொழிற்சங்கச் செயலா் ஏழுமலை பாபு ஆகியோருடன் நாம் தமிழா் கட்சியின் பொறுப்பாளா்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோா் கோவையில் தமிழக மின்சாரத் துறை அமைச்சா் செந்தில் பாலாஜி முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனா்.