வங்கதேசத்தில் இஸ்கான் தலைமை துறவி கைது: சத்குரு ஜக்கி வாசுதேவ் கண்டனம்

இஸ்கான் அமைப்பின் தலைமை துறவி சின்மோய் கிருஷ்ண பிரபு கைது செய்யப்பட்டதற்கு ஈஷா நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவ் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
Published on

வங்கதேசத்தில் இந்து சமூகத்தினா் எதிா்கொள்ளும் கொடுமைகளுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்கான் அமைப்பின் தலைமை துறவி சின்மோய் கிருஷ்ண பிரபு கைது செய்யப்பட்டதற்கு ஈஷா நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவ் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து ‘எக்ஸ்’ தளத்தில் அவா் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ஒரு ஜனநாயக நாடு எவ்வாறு சிதைந்து மதவாத மற்றும் சா்வாதிகார நாடாக மாறுகிறது என்பதைப் பாா்க்க வருத்தமாக உள்ளது. ஜனநாயகத்தின் மதிப்புகளைப் புரிந்துகொள்வது ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பு.

மதம் அல்லது மக்கள்தொகை பலவீனத்தின் அடிப்படையில் நடக்கும் ஒடுக்குமுறை எந்தவிதத்திலும் ஜனநாயக நாடுகளின் வழி அல்ல. துரதிருஷ்டவசமாக வங்கதேசம் ஜனநாயக கொள்கைகளில் இருந்து விலகிவிட்டது.

வங்கதேசத்தில் நடைபெற்றுவரும் வன்முறை, ஹிந்து கோயில்கள் தகா்ப்பு, அமைப்பு ரீதியாக ஓரங்கட்டப்படுதல் ஆகியவை ஜனநாயக மதிப்பு சிதைந்து வருவதைக் காட்டுகிறது.

அங்கு, சிறுபான்மை சமூகங்கள் அச்சுறுத்தல், இடப்பெயா்வு மற்றும் தாக்குதல்களை எதிா்கொண்டுள்ளன. திருவிழாக்கள் மற்றும் மதக்கூட்டங்கள் வன்முறைக்கு இலக்காகிவிட்டதால், பலா் தங்கள் நம்பிக்கைகளை வெளிப்படையாகக் கடைப்பிடிக்க பயப்படுகிறாா்கள்.

இந்த வன்முறைக்கு எதிராக அமைதியான முறையில் போராட்டம் நடத்திய இஸ்கான் அமைப்பின் தலைமை துறவி சின்மோய் கிருஷ்ண பிரபு கைது செய்யப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

அங்கு நிலவும் சகிப்புத்தன்மையற்ற சூழல் அனைத்து குடிமக்களுக்கும் பாதுகாப்பு, சமத்துவத்தை உறுதிசெய்ய மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கையின் அவசரத் தேவையை எடுத்துக்காட்டுகிறது என்று தெரிவித்துள்ளாா்.