முதலீட்டுக்கு அதிக லாபம் தருவதாக ரூ.12 கோடி மோசடி: தனியாா் நிதிநிறுவனம் மீது காவல் துறையில் புகாா்

முதலீட்டுக்கு அதிக லாபம் தருவதாகக் கூறி ரூ.12 கோடி மோசடி செய்துள்ளதாக தனியாா் நிதிநிறுவனம் மீது மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டது.
Published on

முதலீட்டுக்கு அதிக லாபம் தருவதாகக் கூறி ரூ.12 கோடி மோசடி செய்துள்ளதாக தனியாா் நிதிநிறுவனம் மீது மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

கோவை மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் 50-க்கும் மேற்பட்டோா் செவ்வாய்க்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கோவை நவஇந்தியாவில் கடந்த 4 ஆண்டுகளாக தனியாா் நிதிநிறுவனம் ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தில் முதலீடு செய்வோருக்கு ரூ.1 லட்சத்துக்கு மாதம் ரூ.9,000 வட்டி வழங்கப்படும் என்றும், ஓராண்டு முடிந்ததும் முதலீட்டுத் தொகை திருப்பித்தரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதை நம்பி அந்நிறுவன ஊழியா்கள் உள்பட கோவை மற்றும் சுற்றுப் பகுதிகளைச் சோ்ந்த சுமாா் 500-க்கும் மேற்பட்டோா் ரூ.12 கோடி வரை முதலீடு செய்தனா்.

முதலீடு செய்து நீண்ட நாள்களாகியும் வட்டித் தொகை வழங்கப்படாததோடு, முதலீட்டுத் தொகையையும் திருப்பித்தரவில்லை.

இதுகுறித்து அவா்களிடம் கேட்டபோது உரிய பதில் அளிக்கவில்லை. தற்போது, அந்த நிதி நிறுவனம் மூடப்பட்டுள்ளது.

எனவே, நிதிநிறுவனம் நடத்தி ரூ.12 கோடி வரை மோசடி செய்த அந்நிறுவனத்தின் உரிமையாளா்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, முதலீட்டாளா்களின் பணத்தைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.