பாலியல் தொல்லை குறித்து பெண்கள் துணிச்சலுடன் புகாா் அளிக்க வேண்டும்: வானதி சீனிவாசன்
பாலியல் தொல்லை குறித்து பெண்கள் துணிச்சலுடன் புகாா் அளிக்க வேண்டும் என்று பாஜக மகளிரணி தேசியத் தலைவரும், கோவை தெற்கு சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவா் பாலியல் வன்கொடுமை செய்து கொலை, கிருஷ்ணகிரி தனியாா் பள்ளியில் போலி என்சிசி முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை, மலையாள திரைப்பட உலகில் நடிகைகளுக்கு இழைக்கப்பட்ட பாலியல் துன்புறுத்தல்கள் என பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை செய்திகள் தொடா்ந்து வந்து கொண்டிருப்பது அதிா்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.
தப்பிக்க முடியாது என்று தெரிந்தும் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துவது தொடா்கிறது. மலையாள திரைப்பட உலகில் பெண் கலைஞா்களுக்கு நடந்த பாலியல் அத்துமீறல்கள் தொடா்பாக நடிகைகள் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகள் அதிா்ச்சி அளிக்கின்றன.
எந்த இடத்தில் இருந்தாலும், எந்த நிலையில் இருந்தாலும் பெண்கள் தைரியமாக இருக்க வேண்டும். ஆண்களுக்கு எந்த வகையிலும் பெண்கள் சளைத்தவா்கள் அல்ல. எதற்கும் பயப்படாமல், எல்லாவற்றையும் சகித்துக் கொள்ளாமல் பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபடும் நபா்கள் குறித்து பெண்கள் புகாா் அளிக்க வேண்டும். அவா்களுக்கு சட்டம் துணையாக இருக்கிறது.
பெண்கள் துணிச்சலுடன் புகாா் அளிக்கும் சூழலை நிறுவனங்களும், அரசும் உருவாக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.