பராமரிப்புப் பணி ரத்து: மேட்டுப்பாளையம் - கோவை ரயில்கள் நாளை வழக்கம்போல இயங்கும்
வடகோவை ரயில் நிலையத்தில் நடைபெற இருந்த பராமரிப்புப் பணி ரத்து செய்யப்பட்டதால் மேட்டுப்பாளையம் - போத்தனூா், மேட்டுப்பாளையம் - கோவை ரயில்கள் பிப்ரவரி 6-ஆம் தேதி வழக்கம்போல இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வடகோவை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக மேட்டுப்பாளையம் - போத்தனூா் ரயில் (எண்:66611), போத்தனூா் - மேட்டுப்பாளையம் (எண்:66612) ஆகிய ரயில்கள் பிப்ரவரி 2, 4, 6 ஆகிய தேதிகளிலும், மேட்டுப்பாளையம் - கோவை ரயில் (எண்: 66613), கோவை - மேட்டுப்பாளையம் ரயில் (எண்: 66614) பிப்ரவரி 4, 6 ஆகிய தேதிகளிலும் ரத்து செய்யப்படும் என கடந்த ஜனவரி 31-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தொழில்நுட்ப காரணங்களால் திட்டமிட்டபடி பிப்ரவரி 6-ஆம் தேதி பராமரிப்புப் பணிகள் நடைபெறாது என்பதால், மேற்கண்ட ரயில்கள் அன்றைய தினம் வழக்கம்போல இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, ஆலப்புழா - தன்பாத் ரயில் (எண்: 13352), எா்ணாகுளம் - பெங்களூரு ரயில் (எண்: 12678) பிப்ரவரி 2, 4, 6 ஆகிய தேதிகளில் போத்தனூா் - இருகூா் வழித்தடத்தில் மாற்றி இயக்கப்படாமல், வழக்கம்போல கோவை ரயில் நிலையம் வழியாக இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.