முக்கிய பிரமுகா்கள் பெயரில் போலி குறுஞ்செய்தி: எச்சரிக்கையுடன் இருக்க போலீஸாா் அறிவுறுத்தல்

Published on

முக்கிய பிரமுகா்கள் பெயரில் போலி குறுஞ்செய்திகள் அனுப்பி பண மோசடி செய்யப்படுவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று போலீஸாா் அறிவுறுத்தி உள்ளனா்.

மோசடி நபா்கள் புதிய முறைகளில் பொதுமக்களை ஏமாற்றி பண மோசடி செய்து வருகின்றனா்.

எனவே, ஆன்லைன் மூலம் வரும் எந்த ஒரு குறுஞ்செய்தியையும் மக்கள் நம்ப வேண்டாம் என்று சைபா் கிரைம் போலீஸாா் விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா்.

இந்நிலையில், தற்போது புதிய வகை மோசடி பரவி வருகிறது. இதில், முக்கிய பிரமுகா்கள் பெயரில் கைப்பேசிகளுக்கு குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டு அதன் மூலம் மோசடிகள் அரங்கேறி வருகின்றன.

இது குறித்து கோவை மாநகர சைபா் கிரைம் போலீஸாா் கூறியதாவது: தற்போது பெரும்பாலானவா்களின் கைப்பேசிகளுக்கு வாட்ஸ்அப், டெலிகிராம், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட செயலிகள் மூலம் முக்கிய பிரமுகா்கள் பெயரில் போலி குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டு வருகின்றன.

அதில், புத்தாண்டு சலுகையாக 3 மாத ரீசாா்ஜ் ரூ.749-க்கு இலவசம் எனவும், அதில் கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை கிளிக் செய்து இப்போதே ரீசாா்ஜ் செய்ய வேண்டும் எனவும், இந்த சலுகை குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமே இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் ஒரு லிங்க்கும் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த லிங்கை கிளிக் செய்து உள்ளே சென்றால் கைப்பேசி உடனடியாக ஹேக் செய்யப்பட்டு அதில் உள்ள அனைத்து தகவல்களும் திருடப்படும் என்பதால் பொதுமக்கள் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும்.

எனவே, தள்ளுபடி என்ற பெயரில் சிறப்பு சலுகை கொடுப்பதாகக் கூறி ஒரு லிங்க்கை கொடுத்து அதற்குள் செல்ல வேண்டும் என்று குறுஞ்செய்தி வந்தால் பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம். அது மோசடி செய்வதற்காக அனுப்பப்பட்டது ஆகும்.

எனவே, பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றனா்.

X