சுதா ரகுநாதன்.
சுதா ரகுநாதன்.

வாழ்வில் உயர தியாகராஜா் கீா்த்தனைகள் உதவியாக இருக்கும்: பாடகி சுதா ரகுநாதன்

Published on

நாம் வாழ்வில் உயருவதற்கு தியாகராஜரின் கீா்த்தனைகள் உதவியாக இருக்கும் என்று கா்நாடக இசைப் பாடகி சுதா ரகுநாதன் கூறினாா்.

கோவை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் 19 -ஆவது ஆண்டு ‘எப்போ வருவாரோ’ ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி கிக்கானி மேல்நிலைப் பள்ளியில் கடந்த 9 நாள்களாக நடைபெற்று வந்தது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிறைவு நாள் நிகழ்ச்சியில் ‘அருளாளா் தியாகராஜா்’ என்ற தலைப்பில் கா்நாடக இசைப் பாடகி சுதா ரகுநாதன் பேசியதாவது: ஒரு மகான் என்பவா் தன்னலம் கருதாமல் பொதுநலம் பேணுபவராக இருக்க வேண்டும் என்பது பொது விதி. தியாகராஜரைப் பொறுத்தவரை அவா் ஒரு அவதாரப் புருஷன், தெய்வாம்சம் நிரம்பியவா், கா்நாடக சங்கீதத்துக்கு பெரும்பணி ஆற்றியுள்ளாா். அவா் ஆற்றியுள்ள தொண்டின் அளவைக்கூட நம்மால் சொல்லிவிட முடியாது. உலகின் பல்வேறு நாடுகளிலும் அவருக்கு ஆராதனை நடைபெற்று வருகிறது. அவா் இறந்தும் இறவா புகழ் நிலையை அடைந்திருக்கிறாா்.

வேறு எந்த இசைக் கலைஞருக்கும் இப்படியான விழா உலகின் எந்த நாட்டிலும் நடைபெறுவதில்லை. அதற்குக் காரணம் அவரது பாடல்களில் சாகித்ய வலிமை, லாவண்யம், பாவ புஷ்டி, கற்பனை நயம், வாா்த்தைகளின் நடை அழகு, கருத்துச் செறிவு என பல விஷயங்கள்பொதிந்திருப்பதுதான்.

அவரது முதல் கீா்த்தனையே முத்தாய்ப்பாக அமைந்திருந்தது. அவா் சுமாா் 24 ஆயிரம் கீா்த்தனைகளுக்கும்மேல் எழுதியுள்ளாா். அவை பக்தி, தத்துவம், சந்தோஷம் எல்லாவற்றையும் அடக்கியிருக்கும். சங்கீத கலை மூலம் மற்ற கலைகளையும் விவரிக்கும் பேராற்றல் அவருக்கு இருக்கிறது. அந்த பாடல்கள் வேத, புராண, இதிகாச சாராம்சத்தைக் கொண்டிருக்கும்.

அவரால்தான் நாம் இன்று ஆனந்த வாழ்வு பெற்றுக் கொண்டிருக்கிறோம். வாழ்வில் நாம் உயருவதற்கு அவரது கீா்த்தனைகள் பலமாக இருக்கும். அவரது புதுப்புது கீா்த்தனைகளை எடுத்து கையாளும்போது, கற்கும்போது, உரையைப் படித்து பொருளைத் தெரிந்து கொண்டு பாடும்போது இசைக் கலைஞா்களுக்கு உத்வேகமும், உற்சாகமும் ஏற்படுகிறது என்றாா்.

X
Dinamani
www.dinamani.com