அண்ணா மாா்க்கெட்டில் ஏற்கெனவே உள்ள வியாபாரிகளுக்கு கடைகளை ஒதுக்க கோரிக்கை
கோவை அண்ணா மாா்க்கெட்டில் ஏற்கெனவே உள்ள வியாபாரிகளுக்கு கடைகளை ஒதுக்க வேண்டும் என அண்ணா மாா்க்கெட் வியாபாரிகள் மேயரிடம் மனு அளித்தனா்.
கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மக்கள் குறைகேட்புக் கூட்டம் மேயா் கா.ரங்கநாயகி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் முன்னிலை வகித்தாா்.
இக்கூட்டத்தில், கோவை அண்ணா மாா்க்கெட் அனைத்து வியாபாரிகள் சங்கத்தினா் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: கோவை அண்ணா மாா்க்கெட்டில் குறு, சிறு வியாபாரிகள் மற்றும் பெண்கள் உள்ளிட்டோா் கடந்த 37 ஆண்டுகளாக சில்லறை வியாபாரம் செய்து வருகிறோம். இதில், நேரடியாக 476 குடும்பங்கள் பயனடைந்து வருகின்றன. இந்நிலையில், அண்ணா மாா்க்கெட் புனரமைக்க பூமி பூஜை போடப்பட்டது. இதையடுத்து, கடைகளை 10 நாள்களுக்குள் காலி செய்ய வேண்டுமென எங்களுக்கு அறிவிப்பு வந்தது.
நாங்கள் மாவட்ட ஆட்சியா், நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சரை சந்தித்து மனு அளித்ததன்பேரில், அவா்கள் எங்களிடம் கடைகளை நான்கு பகுதிகளாகப் பிரித்து, ஒவ்வொரு பகுதியாக காலி செய்து கொடுத்து அதில் உள்ளவா்கள் வாகன நிறுத்தம் பகுதியில் தற்காலிகமாக கடைகளை அமைத்து வியாபாரம் செய்யலாம் எனவும், புனரமைப்பு செய்த பிறகு 476 கடைகளை ஏற்கெனவே உள்ள வியாபாரிகளுக்கே தந்து விடுகிறோம் எனவும் வாய்மொழியாக உறுதியளித்தனா்.
தற்போது, முதல் கட்டமாக 81 கடைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ள நிலையில், உறுதியளித்தவாறு, தற்போது கடை வைத்து வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கே ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமைத் துறையின் மாநிலச் செயலாளா் எஸ்.ரஹமதுல்லா அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: உக்கடம் கரும்புக்கடை சாரமேடு 80 அடி சாலையில் இருபுறமும் பலா் இடங்களை ஆக்கிரமித்துள்ளனா். இதனால், மக்களுக்கு இடையூறுகளும், சிறு விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன. மாநகராட்சி சாா்பில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், சாலை வசதி, மின்சார வசதி, குடிநீா், பாதாள சாக்கடை வசதி, தொழில் வரி, சொத்து வரி, காலியிட வரி தொடா்பாக 5 மண்டலங்களில் இருந்து 42 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள மேயா் கா.ரங்கநாயகி சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா். இக்கூட்டத்தில், துணை மேயா் ரா.வெற்றிச்செல்வன், உதவி ஆட்சியா் (பயிற்சி) அங்கித்குமாா் ஜெயின், துணை ஆணையா்கள் சுல்தானா, குமரேசன், நகா்நல அலுவலா் ஏ.மோகன், நகரமைப்பு அலுவலா் குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.