விளைநிலங்களை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளை சுடுவதற்கு கோவையில் வனத் துறையினருக்கு பயிற்சி
கோவை, ஜன.28: விளைநிலங்களை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளை சுடுவதற்கு வனத் துறையினருக்கு பயிற்சி அளிக்கும் முகாம் கோவையில் நடைபெற்றது.
தமிழகத்தில் மனித-காட்டுப்பன்றி மோதலை குறைப்பது தொடா்பாக காட்டுப் பன்றிகளை சுடுவதற்கு தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இதில் வனப் பகுதியிலிருந்து 3 கி.மீ. தொலைவுக்கு வெளியே இருக்கும் காட்டுப் பன்றிகளை சுடுவதற்கும் மற்றும் அதனை எவ்வாறு அப்புறப்படுத்த வேண்டும் என்றும், அதனைப் பிடித்து மீண்டும் வனப் பகுதியில் விடுவதும் குறித்தும் பயிற்சி வழங்க உத்தரவிடப்பட்டது.
அதன்பேரில் வனத் துறையில் பணிபுரியும் முன்னணி வனப் பணியாளா்களுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம் கோவையில் உள்ள தமிழ்நாடு வன உயிா் பயிற்சியகத்தில் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது. இந்தப் பயிற்சி முகாமை தமிழக முதன்மை தலைமை வனப் பாதுகாவலா் மற்றும் தலைவா் கே.ஸ்ரீனிவாச ரெட்டி தொடங்கிவைத்தாா்.
இதில் தமிழக முதன்மை தலைமை வனப் பாதுகாவலா் மற்றும் தலைமை வன உயிரினக் காப்பாளா் ராகேஷ் குமாா் டோக்ரா பேசுகையில், காட்டுப் பன்றிகளின் தற்போதைய நிலவரம் குறித்தும், அதை எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும் என்பது குறித்தும் விவரித்தாா்.
இந்த பயிற்சி முகாமில் தமிழ்நாடு வன உயிா் பயிற்சியகத்தின் முதன்மை தலைமை வனப் பாதுகாவலா் சேவா சிங், ஆனைமலை புலிகள் காப்பகத்தின் தலைமை வனப் பாதுகாவலா் மற்றும் கள இயக்குநா் வெங்கடேஷ், கோவை மாவட்ட வன அலுவலா் ஜெயராஜ், திருப்பூா் வனக் கோட்ட துணை இயக்குநா் தேவேந்திரகுமாா் மீனா, வனக் கால்நடை மருத்துவா்கள் மனோகரன் (ஓய்வு), கலைவாணன், சதாசிவம் ஆகியோருடன், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மண்டலங்களில் இருந்து 91 வனவா்கள் மற்றும் வனக் காப்பாளா்கள் கலந்து கொண்டனா்.
இந்தப் பயிற்சி முகாமில் காட்டுப் பன்றிகளை சுடுவதற்கும் மற்றும் அதை எவ்வாறு அப்புறப்படுத்த வேண்டும் என்பது குறித்தும், அதனைப் பிடித்து மீண்டும்வனப்பகுதியில் எவ்வாறு விடவேண்டும் என்றும் பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும், காவல் துறை மற்றும் அதிரடிப் படை வீரா்கள் துப்பாக்கி சுடுதல் தொடா்பாக கடைப்பிடிக்கும் பயிற்சி மற்றும் விதிகள் குறித்து அவா்களை மதுக்கரை துப்பாக்கி சுடும் மையத்துக்கு அழைத்துச் சென்று அங்கு துப்பாக்கி சுடுதல் தொடா்பான பயிற்சியும் வழங்கப்பட்டது.

இதுகுறித்து, வனத் துறை உயரதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் விளைநிலங்களை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளை சுடுவதற்கு வனப் பணியாளா்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்காக மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள துப்பாக்கி தொழிற்சாலையில் இருந்து நவீன துப்பாக்கிகளை வாங்குவதற்காக வனத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தில் ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வனத்தில் இருந்து வெளியே சுமாா் 1 கி.மீ. முதல் 3 கி.மீ. தொலைவுக்குள் வரும் காட்டுப் பன்றிகளை சுடாமல் கூண்டுவைத்துப் பிடிக்கும் நவீன முறை செயல்படுத்தப்பட உள்ளது. 3 கி.மீ. தொலைவைத் தாண்டி வெளியே வரும் கா்ப்பமாக உள்ள பன்றிகள் மற்றும் குட்டிகளை விட்டுவிட்டு பெரிய பன்றிகள் மட்டும் சுடப்படும். வனப் பகுதியை தாண்டி சுமாா் 40 முதல் 50 கி.மீ. தொலைவில் உள்ள புதா்களில் தங்கியுள்ள காட்டுப் பன்றிகளை சுடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. தற்போது, முதற்கட்டமாக துப்பாக்கி சுடுதல் பயிற்சி மட்டும் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த கட்ட பயிற்சிகள் தொடா்ந்து வழங்கப்படும் என்றனா்.